கணவனை ஓட ஓட விரட்டி மனைவி துப்பாக்கிச் சூடு நடத்தியதால், பெங்களூரு வீதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஹம்ஸா (48), சாயிராம் (53) இருவரும் பிரிந்து வாழும் தம்பதியினர். எவ்வாறெனினும், நேற்று (5) வெள்ளிக்கிழமை இவர்கள் இருவரும் தமக்குச் சொந்தமான ஆடம்பர வாகனத்தில் தமிழகத்தில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.

ஹோசூர் அருகே மதிய உணவருந்தி மீண்டும் தமது பயணத்தைத் தொடர்ந்தனர். அப்போது அவர்கள் இருவருக்கிடையே பிரச்சினை உருவானது. திடீரெனத் தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்த ஹம்ஸா, அவரது கணவரை நோக்கிச் சுட்டார்.

காயமடைந்த சாயிராம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள எண்ணி, வாகனத்தை நடு வீதியில் விட்டு விட்டு ஓடிச் சென்று, முன்னால் சென்றுகொண்டிருந்த பேருந்தினுள் ஏறினார்.

கோபம் தலைக்கேறிய ஹம்ஸா அவர்களது ஆடம்பர வாகனத்தைச் செலுத்திச் சென்று பேருந்தை மடக்கினார். பின்னர் காரை விட்டிறங்கிய ஹம்ஸா, ஓடிச் சென்று பேருந்தினுள் ஏறி, சாயிராமை நோக்கி மீண்டும் சுடத் தொடங்கினார்.

பதறிப்போன மக்கள் ஒருவழியாக ஹம்ஸாவை மடக்கிப் பிடித்தனர். 

இதற்கிடையே தகவல் அறிந்த பொலிஸார் ஸ்தலத்துக்கு வந்து, சாயிராமையும், ஹம்ஸாவையும் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மன நிலை பாதிக்கப்பட்டவரா என்ற பரிசோதனைக்குப் பின் ஹம்ஸா மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவுசெய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.