உலகில் எஞ்சியுள்ள தமிழ் அடிப்படைவாத குழுக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு விளக்கேற்றும் அதேநேரம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷக்கும் இன்னுமொரு விளக்கை ஏற்றும்  தகவல்கள் எமக்கு கிடைத்திருக்கின்றன என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர சபையில் தெரிவித்தார்.

கூட்டு எதிரணியினரை அந்த அடிப்படைவாதக் குழுக்கள் உயிரை கொடுத்துக் காப்பாற்றுவார்கள் எனவும் அமைச்சர் மங்கள சமரவீர புன்னகையுடன் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில்  நடைபெற்ற இராஜதந்திர சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழான கட்டளையை அங்கீகரித்துக் கொள்வதற்கான பிரேரணையின் மீதான விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போதே அமைச்சர் சமரவீர இந்த விடயங்களை குறிப்பிட்டார். 

உலகில் எஞ்சியுள்ள தமிழ் அடிப்படைவாத குழுக்கள் இந்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சித் தலைவர்களை உயிர்கொடுத்து பாதுகாப்பார்கள். ஏனெனில்,உண்மையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த மக்களின் ஆணையைப் பெற்ற ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன, வரலாற்றில் முதன் தடவையாக வடக்கிலுள்ள தமிழ் மக்களின் அதிகூடிய வாக்குகளைப் பெற்றவராகக் காணப்படுகின்ற சிங்கள ஜனாதிபதியாக இருக்கின்றார்.

அதைதோற்கடிக்க வேண்டும் என்ற தேவை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கும், உலகில் பலபகுதிகளில் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளுக்கும் இருக்கிறது. இது தொடர்பான ஒப்பந்தம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவர்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு விளக்கேற்றும் முன்னாள் ஜனாதிபதிமகிந்த ராஜபக்ஷக்கும் இரண்டவதாக விளக்கை ஏற்றகின்றார்கள் என்ற எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.  ஆகவே கூட்டு எதிரணியில்  உள்ள எவரது உயிருக்கும் இங்கு எந்த ஆபத்தும் கிடையாது.

விமல் வீரவன்சவின் கொலம்பிய பயணம்

தேசப்பற்றாளர் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் விமல் வீரவன்ச 2014ஆம் ஆண்டு கொலம்பியாவில் நடைபெற்ற மாநாடொன்றுக்கு இலங்கையின் பிரதிநிதியாக தனது 11 வயதுமகனையும் அழைத்துச் சென்றுள்ளார். அவர் அரசாங்கத்தின் செலவிலேயே தமது மகனை அழைத்துச் சென்றுள்ளார். 

இவ்வாறானவர்கள் தான் தேசப்பற்று தொடர்பில் பேசுகின்றனர். கண்ணாடிக் கூட்டுக்குள் இருந்துகொண்டு கல்லெறிய வேண்டாம் பதிலுக்கு எறிவதற்கு எம்மிடம் இலட்சம் கற்கள் இருக்கின்றன என்றும் எச்சரிக்கை விடுத்தார்.