அமெரிக்க பிரஜா உரிமையை விட்டுக்கொடுக்கமாட்டேன். கோத்தபாயவும் நானும் தேர்தலில் போட்டியிடாமல் தடுப்பதற்கே நல்லாட்சி அரசாங்கம் இந்த சட்டத்தை கொண்டுவந்தது என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள  நேர்காணலிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

இரட்டை பிரஜா உரிமை இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது நல்லாட்சி அரசங்கத்தினால் கொண்டுவரப்பட்ட புதிய சட்டமாகும். 

நானும் கோத்தபாய ராஜபக்ஷவும் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் வகையிலே  அந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. என்றாலும் குறித்த சட்டத்தினால் தற்போது மாட்டிக்கொண்டிருப்பது கீதா குமார சிங்கவும் முன்னிலை சோசலிச கட்சியின் தலைவருமாகும். 

19ஆம் திருத்தம் என்பது புதிய விடயம் அல்ல. 

மேலும் இரட்டைபிரஜா உரிமை இருப்பவர்கள் நாட்டில் இடம்பெறுகின்ற தேர்தல்களில் போட்டியிட முடியாது என தெரிவித்திருப்பது நல்லவிடயமல்ல. 

இவ்வாறானவர்கள் உலகில் பலர் இருக்கின்றனர். கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் இரட்டை பிரஜா உரிமை இருக்கின்றது.

இதனால் எந்த பாதிப்பும் அவருக்கு ஏற்படவில்லை. ஆனால் எமது நாட்டு பிரஜா உரிமை இல்லாத அர்ஜுன் மஹேந்திரனுக்கு மத்திய வங்கி ஆளுநர் பதவி வழங்கப்பட்டிருந்தது. இது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விடவும் பயங்கரமானதாகும்.

அத்துடன் எனக்கு அமெரிக்க பிரஜா உரிமை இருக்கின்றது. அதனை விடுவதற்கு நான் தயாரில்லை.

என்னுடைய மனைவி,  பிள்ளைகள் அங்குதான் இருக்கின்றனர். அதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. அத்துடன் அமெரிக்க பிரஜா உரிமையுடன்தான் இலங்கையில் அரசியலுக்கு வந்தேன். அதனை அறிந்தும் கம்பஹா மாவட்ட மக்கள் எனக்கு அதிக விருப்பு வாக்குகளை வழங்கியிருந்தனர்.

மேலும் 19ஆம் திருத்தம் மூலம் அரசாங்கம் எதனையும் செய்யவில்லை. ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைப்பதாக தெரிவிக்கின்றனர்.

அவ்வாறு செய்திருந்தால் முடியுமானால் காட்டட்டும். மாறாக மஹிந்த ராஜபக்ஷவுக்கும் எங்களுக்கும் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்ததை மாத்திரமே மேற்கொண்டனர். வேறு எந்த திருத்தத்தையும் இதன் மூலம் மேற்கொள்ளவில்லை.

அத்துடன் கோத்தபாய ராஜபக்ஷ அரசியலுக்கு வருவதாக இருந்தால் அவர் அமெரிக்க பிரஜா உரிமையை இல்லாமலாக்கிக்கொள்ள நேரிடும். அவர் அரசியலுக்கு வருவது தொடர்பாக மக்களே தீர்மானிப்பார்கள் என்றார்.