2017 ஆம் கல்வியாண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. எனவே அப்பரீட்சைக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சாத்திகள் இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்திசெய்யப்பட்ட தமது விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும். பாடசாலை பரீட்சாத்திகளுக்கான விண்ணப்பப்படிவங்கள் பாடசாலை அதிபர்களுக்கு பரீட்சைத் திணைக்களத்தால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. 

மேலும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான விண்ணப்ப மாதிரி கடந்த வியாழக்கிழமை வெளியான பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன. எனவே தனிப்பட்ட பரீட்சார்த்திகள் அதற்கேற்ப விண்ணப்படிவங்களை பூர்த்திசெய்து பரீட்சைக் கட்டணம் செலுத்திய பற்றுச்சீட்டையும் விண்ணப்பத்துடன் இணைத்து பதிவுத் தபாலில் அனுப்பிவைக்க வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.