(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் தருவாயில் அவரது பாதுகாப்பு பிரிவின் 42 பேர் நீக்கப்பட்டுள்ளனர். எனவே இது தொடர்பில் சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினேஷ் குணவர்தன சபையின் கவனத்திற்கு கொண்டு வந்த போது   ஆளும் எதிர்த் தரப்பினரிடையே கடும் தர்க்கம் ஏற்பட்டது.

தர்க்கத்தின் முடிவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் விசேட கவனத்திற்கு கொண்டு வருவதாக  சபாநாயகர் கரு ஜயசூரிய உறுதியளித்தார்.

பாராளுமன்றம் இன்று வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியது.   

சபாநாயகர் அறிவிப்பு, மனுக்களைச் சமர்ப்பித்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தினை சபாநாயகர் ஆரம்பிக்க முற்பட்ட போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டு எதிர்க் கட்சியி ஆதரவு உறுப்பினரான பாராளுமன்ற உறுப்பினர்   தினேஷ் குணவர்தன ஒழுங்கு பிரச்சினையை எழுப்பினார்.

அவர் தனது ஒழுங்குப் பிரச்சினையில், முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. 

இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி பல தடவை குறிப்பிட்டுள்ளார். எனினும் மே தினத்திற்கு பின்னர் நேற்று முன் தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவின் 42 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இது பெரும் அநீதியமாகும். 

உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் தருவாயில் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினர் தொகை குறைக்கப்பட்டமையின் ஊடாக மேலும் அவருக்கு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.  

அரசாங்கம் வேண்டும் என்றே இதனை செய்துள்ளது. முன்னாள்    ஜனாதிபதி  மீதான  அச்சத்தின் காரணமாகவே பாதுகாப்பு  பிரிவினர் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளனர்  என்றார்.

ஆளும் தரப்பினர் கோஷம்

இச்சமயத்தில்  ஆளும் தரப்பினர் கடுமையாக  கோஷமிட்டனர்.  இதனால் சபையில் அமைதியற்ற நிலைமை ஏற்பட்டது.   கூட்டு எதிரணியினரின் பகுதியை நோக்கி சைகை செய்து கோஷமிட்டனர்.

அவதானம் செய்வதாக 

கூறிய சபாநாயகர்

இந்த விடயம் தொடர்பாக கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்     மூவர் எனக்கு தெரியப்படுத்தினர். நான் அவ்விடயம்   தொடர்பாக     அவதானம் செலுத்துகின்றேன். இது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி குறித்த பிரச்சினையை தீர்ப்பேன். சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவுடனும் கலந்துரையாடவுள்ளேன் என்றார்.

மீண்டும் எழுந்த தினேஷ்

இச்சமயத்தில் குறுக்கீடு செய்த தினேஷ் குணவர்த்தன எம்.பி, முன்னாள் ஜனாதிபதி பாதுகாப்பு குறைக்கப்பட மாட்டாது  என ஏற்கனவே பல தடவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரடியாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பிரதமருடன் பேசினோம். எனினும் தற்போது பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. இது பெரும் அநியாயமாகும். அதற்கான காரணம் என்ன? எனக் கேள்வி எழுப்பினார். 

சபை முதல்வரின் பதில்

இச்சமயத்தில் எழுந்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல கூறுகையில், இவர்கள் கூறுவதனை போன்று நாம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவினரின் எண்ணிக்கை குறைக்கவில்லை. எவரையும் நாம் நீக்கவில்லை.  பொலிஸ் விசேட அதிரடி படையினரை முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு வழங்கியுள்ளோம். நாட்டில் உள்ள சிறந்த படைப்பிரிவாக விசேட அதிரடிப்படை காணப்படுகின்றது என்றார்.

டலஸின் இரண்டு காரணங்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டு எதிரணி ஆதரவு உறுப்பினரான   மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தான் இரண்டு காரணங்களை  முன்வைக்கவுள்ளேன் எனக் கூறியவாறு எழுந்தவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனின் உயிருக்கு விடுதலை புலிகளினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதன்போது அவருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டது. எனவே சுமந்திரன் எம்.பிக்கே விடுதலை புலிகளினால் அச்சுறுத்தல் என்றால் அதனை விடவும்  பாரதூரமான அச்சுறுத்தல் யுத்தததை நிறைவு செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு விடுதலை புலிகளினால்;  எவ்வளவு அச்சுறுத்தல் இருக்கும்.  

அதுமாத்திரமின்றி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முன்னாள் ஜனாதிபதியை சால்வையால் தூக்கிலிட்டு கொலை செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இவையெல்லாம் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அநுரகுமாரவின் நியாயம்

இதன்போது  மக்கள் விடுதலை  முன்னணியின்  தலைவரும்  எதிர்க்கட்சி பிரதம கொறடாவுமான அநுர குமார திஸாநாயக்க எம்.பி ஒரு கட்சியின் தலைவர் என்ற வகையில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் தருவாயில்   அரசியல்    நோக்கத்திற்காக      அவரது  பாதுகாப்பு குறைக்கப்படுமாயின் அது தவறாகும். அது  நீதியான செயற்பாடும்  அல்ல. ஆகவே இந்த விடயத்தில் அழுத்தம் பிரயோகிக்க முடியாது என்றார்.

சபாநயகரின் உறுதி

இச்சமயத்தில்  இது தொடர்பில் விவாதம் செய்ய வேண்டியதில்லை. இது குறித்து ஜனாதிபதி , பிரதமரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அமைச்சர் சாகல ரட்நாயக்கவின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு உரிய  நடவடிக்கை எடுப்படும் என்பதை உறுதியாக கூறுகின்றேன். இத்துடன் இவ்விடயத்தை நிறைவு செய்யுங்கள் எனக் கூறினார்.