தொண்ணூறு நிமிட தாமதத்துக்கு ஆறு மாத சிறை!

Published By: Devika

03 May, 2017 | 05:11 PM
image

விசா காலம் முடிவடைந்து மேலதிகமாகத் தொண்ணூறு நிமிடங்களை மட்டுமே தங்கியிருந்த அவுஸ்திரேலியப் பிரஜை ஒருவரை அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் கைது செய்து சிறையிலடைத்தனர்.

பாக்ஸ்டர் ரீட் (26) என்ற அவுஸ்திரேலிய இளைஞர், கடந்த மாதம் தனது அமெரிக்க தோழியுடன் நியூயோர்க் சென்றிருந்தார். அங்கிருந்து கனடாவுக்குச் செல்ல நினைத்த ரீட், அமெரிக்க-கனடிய எல்லைக்குச் சென்றார். 

ரீட்டின் விசா காலம் ஏப்ரல் 23ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவுக்கு வரவிருந்தது. கனடிய எல்லைப் பகுதிக்கு அமெரிக்க நேரப்படி இரவு 10 மணிக்குச் சென்றார் ரீட். அவரைக் காத்திருக்குமாறு கூறிய கனடிய குடிவரவு அதிகாரிகள் சிலர், அதிகாலை ஒன்றரை மணியளவில், ரீடுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிவித்ததுடன், ரீடை அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

விசா காலம் முடிவடைந்து தொண்ணூறு நிமிடங்கள் கடந்ததைக் காரணம் காட்டிய அமெரிக்க அதிகாரிகள் ரீடை பஃபலோ சிறைச்சாலையில் அடைத்ததுடன், அடுத்த ஆறு மாதங்களின் பின்னரே ரீட் நீதிபதி முன் நிறுத்தப்படுவார் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியை அறிந்த ரீடின் பெற்றோர், தமது மகனை மீட்டுத் தருமாறு அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right