ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இன்னும் உள்ளது. இந்த சந்தேகங்களை நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்று முன்னாள் முதல்வர் ஓபன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த போது இதனை தெரிவித்தார். மேலும் அவர் பேசும் போது,‘மு.க.ஸ்டாலின் தற்போது அரசியல் காரணங்களுக்காக தனக்குரிய பாணியில் யாருமே சிந்திக்க முடியாத சில கருத்துக்களை கூறுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். நான் முதல்வராக இருந்த போது வைத்தியசாலையில் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து ஆலோசனை நடத்தினேன். அவர் வைத்தியசாலையில் இருந்த 74 நாட்களில் எங்களால் ஜெயலலிதாவை பார்க்கமுடியாத சூழல் உருவாக்கப்பட்டிருந்தது. மருத்துவ குழுவினர் அளிக்கும் தகவலை அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர்கள் வெளியிட்டார்கள். அதனை நாங்கள் அப்படியே நம்பினோம். ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இன்னும் உள்ளது. அதனால் தான் இந்த சந்தேகங்களை நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.’ என்றார். 

முன்னதாக கர்நாடக அதிமுகவின் அம்மா அணி செயலாளரான புகழேந்தி, ‘ஜெயலலிதாவிற்கு அப்பல்லோ வைத்தியசாலையில் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அதில் மர்மம் இருப்பதாக சிலர் சொல்லி வருகிறார்கள். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது எடுத்த புகைப்படங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும். அதற்கான அனுமதிக்காக காத்திருக்கிறோம். அந்த புகைப்படங்கள் வெளியானால் பலரது முகத்திரை கிழியும். ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது உடன் இருந்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது சி.பி.ஐ. விசாரணை கேட்கிறார். உண்மைகள் விரைவில் வெளிவரும்.’ என்று மதுரையில் நடைபெற்ற ஒரு ஆர்ப்பாட்டத்தின் போது பேசியிருக்கிறார். இது குறித்து ஓ பி எஸ் யிடம் கருத்து கேட்ட போது அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் : சென்னை அலுவலகம்