சினிமாவில் நடிக்க வந்து 10 வருடம் ஆகிவிட்டதால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பதில் அக்கறை காட்டுகிறேன் என்று தமன்னா கூறியுள்ளார்.

“நான் நடிகையாவேன் என்று கனவிலும் நினைத்தது இல்லை. எதிர்பாராமல் அது நடந்து விட்டது. சினிமாவில் நடிக்க வந்து 10 வருடங்கள் ஆகி விட்டது. இதனால் எனக்கு நிறைய பக்குவம் ஏற்பட்டு இருக்கிறது. கதைகள் தேர்வில் அக்கறை எடுக்கிறேன். வழக்கமான காதல் படங்களை தவிர்த்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வித்தியாசமான கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டுகிறேன்.

‘பாகுபலி’ படம் அப்படித்தான் அமைந்தது. தமிழில் நயன்தாரா நடிக்கும் கொலையுதிர் காலம் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. அந்த படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள மேலும் 2 தெலுங்கு படங்கள் மற்றும் 2 இந்தி படங்களுக்கும் ஒப்பந்தமாகி உள்ளேன்.

சினிமாவில் ஒவ்வொரு நிமிடமும் எனக்கு முக்கியமாக இருக்கிறது. இந்த தொழிலை ஒரு கலை நயத்தோடு செய்கிறேன். நுணுக்கமாகவும் யோசிக்கிறேன். சினிமாவுக்கு வராமல் இருந்திருந்தால் இவ்வளவு பெயரும் புகழும் கிடைத்து இருக்காது. பணம் ஒரு வேளை சம்பாதித்து இருக்கலாம். ஆனால் ரசிகர்களையும் அவர்களின் அன்பையும் சம்பாதித்து இருக்க முடியாது.

24 மணிநேரமும் ஓய்வு இல்லாமல் நடித்தாலும் கூட எனக்கு அலுப்பு ஏற்படவில்லை. அந்த அளவுக்கு சினிமா பிடித்து இருக்கிறது. சினிமா ஒரு கனவு உலகம். அதனால்தான் இங்கு வேலை செய்யும் ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ச்சியாக இருக்கிறது. படப்பிடிப்பு அரங்குகள் ஒவ்வொன்றும் எனக்கு பள்ளிகூடம் போலவே தோன்றுகிறது.

தினமும் அந்த அரங்குக்குள் புதுப்புது விஷயங்களை கற்றுக்கொள்கிறேன். எதிர்காலத்தில் இங்கு கற்ற பாடங்கள் எனக்கு நிச்சயம் பலன் அளிப்பதாக இருக்கும்.” இவ்வாறு தமன்னா கூறினார்.