இஸ்ரேலுடன் நீண்ட காலமாகப் போர் புரிந்து வரும் பாலஸ்தீன இயக்கமான ஹமாஸ், இஸ்ரேல் குறித்த தனது நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்த ஆவணம் ஒன்றை கடந்த திங்களன்று ஹமாஸ் வெளியிட்டுள்ளது. அதில், இஸ்ரேலுடனான போக்கை இலகு படுத்தும் சில அம்சங்களை ஹமாஸ் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்மூலம், சர்வதேச ரீதியில் தனது தோற்றத்தை மாற்றவும் ஹமாஸ் எண்ணியுள்ளதாகத் தெரிகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் ஆகியோர் முதன்முறையாக சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையிலேயே ஹமாஸ் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

இது குறித்த ஆவணத்தை நாடு கடத்தப்பட்ட ஹமாஸின் தலைவர் காலேத் மெஷால் கட்டாரின் தலைநகரான டோஹாவில் வெளியிட்டார். இந்த நிகழ்வு, பாலஸ்தீனம்-இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளின் சர்ச்சைக்குரியதும், ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ளதுமான காஸா கரைப் பகுதியில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

எனினும், இந்த ஆவணத்தை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் தரப்பில் இருந்து எதுவிதமான சமிக்ஞைகளும் வெளியாகவில்லை.