ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச தரப்புக்கள் என அனைவரும் எங்களைக் கைவிடாததால் ஈழத் தமிழர் அரசியல் இப்பொழுது திருப்பு முனையில் வந்து நிற்கிறது என்பதையிட்டு நாங்கள் மகிழ்ச்சி கொள்ள வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

தந்தை செவ்வாவின் 40வது நினைவு தின நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு களுதாவளை கலாசார மண்டபத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதிக் கிளை ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஜெனீவாத் தீர்மானமும் ஈழத் தமிழர் அரசியலும் எனும் தலைப்பில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்;திரன் உரையாற்றினார். அதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

உலகம் எங்களைக் கைவிட்டு விடக் கூடாது. தந்தை செல்வாவின் வழியிலே வந்த சம்பந்தன் ஐயா தமிழர்களுக்குத் தலைவனாகக் கிடைத்திருப்பது ஒரு பெரும் பாக்கியம் என்றே கருத வேண்டும். ஆகவே இந்த சந்தர்ப்பத்தை எமக்கு சாதகமாக பயன்படுத்தி எமது இலக்கினை அடைய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்போம்.