சபை முதல்வரும் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷமன் கிரிஎல்லவின் பன்முகப்படுத்தபட்ட நிதியில் தோட்டங்கள் மற்றும் கிராமபுறங்களில் மக்கள் பாவனைக்குதவாத வீதிகள் புனரமைப்பு செய்வதற்காக வேலைதிட்டங்கள் முன்னெடுக்க நேற்று பிற்பகல் திரைநீக்கம் செய்யப்பட்ட பெயர்பலகை இனந்தெரியாத நபர்களால் நேற்று இரவு உடைத்தெறியப்பட்டுள்ளது என நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் வெஞ்சர் தோட்டத்தில் நேற்று வைபவ ரீதியாக அமைச்சர் லக்ஷமன் கிரிஎல்ல ஊடாக இந்த பெயர்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டது. 

தோட்டப்பகுதிகளில் 20 வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்படாத வீதிகளை இனங்கண்டு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸ, அமைச்சர் லக்ஷமன் கிரிஎல்லவின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து மேற்படி தோட்டத்தில் மக்கள் பாவனைக்குதவாத வீதியினை புனரமைப்பு செய்வதற்காக பணிகளை முன்னெடுக்க இந்த பெயர் பலகை திரைநீக்கம் செய்யப்பட்டது.

இதனை தாங்கிக்கொள்ள முடியாத சில விஷமிகளால் பெயர்பலகை உடைத்தெறியப்பட்டுள்ளது. இவ்வாறு உடைத்தெறியப்பட்ட பெயர்பலகையை நேற்று நோர்வூட் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பாக விஷமிகளை கண்டறியும் முகமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

தமக்கு அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்கும் நிலையில் இவ்வாறான இழிவான செயல்களை செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்குமாறு இப்பகுதி மக்கள் நோர்வூட் பொலிஸாருக்கு வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.

(க.கிஷாந்தன்)