(எம்.ஆர்.எம்.வஸீம்)

தொழிலாளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக்கொண்டே மேதினக் கூட்டங்களை கணிக்கவேண்டும். சாதாரண மக்களைக்கொண்டு மக்கள் கூட்டத்தை காட்டுவதாக இருந்தால் அது தேர்தல் கூட்டமாகவே இருக்கவேண்டும் என இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில்,

அரசியல் தலைவர்கள் தங்களது மேதினம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர். என்றாலும் தொழிற்சங்கங்களுக்கே மேதினம் தொடர்பாக கதைக்கும் உரிமை இருக்கின்றது.

தொழிலாளர்களுக்காகவே மேதினம் கொண்டாடப்படுகின்றமையால் தொழிலாளர்களின் உரிமை, அவர்களின் சம்பளம் தொடர்பாக குரல் கொடுக்கும் அவர்களுக்காக பல இன்னல்களை சந்தித்துவரும் எங்களுக்கே மேதினம் தொடர்பாக கதைக்கும் உரிமை இருக்கின்றது. 

அத்துடன் தொழிலாளர்களுக்காக கொண்டாடப்படும் மேதின கூட்டத்தில் தொழிலாளர்கள் எத்தனைபேர் கலந்துகொண்டார்கள் என்பதன் அடிப்படையிலேயே மேதின கூட்டம் தொடர்பாக கணிப்பிடப்படவேண்டும். ஏனெனில் இன்று ஒருசில அரசியல் தலைவர்கள் மக்கள் கூட்டத்தை காட்டி  தங்கள் அரசியல் பலத்தை காட்டுவதற்காக மேதினத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

அதேபோன்று ஒருசிலர் மேதினக் கூட்டங்களை அரசியல் மேடைகளாக பயன்படுத்தி வருகின்றனர். அவர்களின் அரசியல் பலத்தை காட்டும் தினம் அல்ல என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.

எனவே தோட்டத்தொழிலாளர்களும் ஏனைய தொழிலாளர்களும் மாத்திரமே மேதினம் தொடர்பாக கதைப்பதற்கு உரித்துடையவர்கள். அவர்களின் உரிமையை பெற்றுக்கொடுப்பதற்காகவே மேதினம் கொண்டாடப்படவேண்டும். மாறாக குறுகிய அரசியல் நோக்கத்துக்காக மேதினம் பயன்படுத்தப்படுவதை வன்மையாக கண்டிக்கின்றோம் என்றார்.