எட்டு பிரபல கூடைப்பந்தாட்ட அணிகள் பங்குபற்றும் ஆறாவது அருட்தந்தை ஈ.ஜே.ஹேபர்ட் கிண்ணக் கூடைப்பந்தாட்டத் தொடர் இன்று மட்டக்களப்பு சென்.மைக்கல்ஸ் கல்லூரியின் கூடைப்பந்தாட்ட மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு சென்.மைக்கல்ஸ் கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் கொழும்பு கிளையினர் ஏற்பாடு செய்துள்ள அருட்தந்தை ஈ.ஜே.ஹேபர்ட் ஞாபகார்த்த கிண்ண கூடைப்பந்தாட்டப் போட்டியில் இரண்டு மட்டக்களப்பு அணிகள் மோதுகின்றன. 

அதேபோல் யாழ்ப்பாணம், மொரட்டுவை, முத்துவல் – குருநாகல், இலங்கை இராணுவம், இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை பொலிஸ் ஆகிய அணிகள் இந்தத் தொடரில் கலந்துகொள்கின்றன.

இன்று ஆரம்பமாகும் குறித்த போட்டியானது எதிர்வரும் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இன்றைய ஆரம்ப வைபவத்தில் சிறப்பு அதிதியாக அருட்தந்தை போல் சற்குணநாயகம் கலந்துகொள்கிறார்.

அதேபோல் தொடரின் இறுதி நாளில் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி பி.எம்.சார்ள்ஸ் கலந்துகொள்கிறார்.

இத்தொடருக்கான சிரேஷ்ட ஆலோசகராக ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் இக்னேஸியஸ் டி.கனகரட்ணம் செயற்படுகிறார். அதேபோல் போட்டி ஏற்பாட்டுக்குழுத் தலைவராக ஜே.சி.டானியல் செயற்படுகின்றார்.

இந்தப் போட்டித் தொட ரில் பங்குபற்றும் அனைத்து அணி வீரர்களுக்கான அனைத்து வசதிகளையும் போட்டி ஏற்பாட்டுக் குழு வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.