தற்போது ஆட்சியில் உள்ள கூட்டணி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு தன்னுடன் கைகோர்க்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரை எவ்விடத்திலும் குறிப்பிடாமல் அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'40 வருட காலமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கத்தவராகவும் 13 வருடகாலம் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்த ஒரு நபர், கட்சிக்கு துரோகமிழைப்பார் என நினைத்துக் கூட பார்க்கவில்லை.

பிரதமராவதற்கான தகுதி எனக்கு இருந்த போதிலும், 43 ஆசனங்களை மாத்திரம் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு பதவி கொடுக்கப்பட்டது. 

இதன்போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவராக நானே செயற்பட்டேன். ஐக்கிய தேசியக் கட்சியை விட அதிக ஆசனங்களும் எம்மிடம் இருந்தும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பதவி வழங்கப்பட்டது.

எதிர்காலத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பிளவுப்பட்டு இரண்டு குழுக்களாக பிரியுமானால் அதன் முழுப்பொறுப்பையும் தற்போதைய தலைவரே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியுடனாக இரகசிய ஒப்பந்தம் காரணமாகவே அண்மையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் பலர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். 

கட்சியின் கொள்கை பிரகாரம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவேன் என உறுதி வழங்கியவர், மக்களின் அதிக செல்வாக்குடன் காணப்பட்ட கட்சியின் அமைப்பாளர்கள் தற்போது பணிநீக்கம் செய்துள்ளார். இதன் மூலம் 2015 ஆண்டு செய்துகொள்ளப்பட்ட இரகிய ஒப்பந்தம் அடிப்படையி;ல் ஐக்கிய தேசியக் கட்சி பலப்படுத்தப்பட்டுள்ளது.

கட்சியின் உயர்வுக்காக பாடுப்பட்ட கட்சியின் அமைப்பாளர்களின் தியாகங்களை கொஞ்சம் கூட மனதில் நினைக்காமல் அவர்களை நிந்திக்கும் வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் அமைப்பாளர் பதவியின் மதிப்பை குறைவடையச் செய்துள்ளார்.

இதேவேளை எவ்வித பயனும் இல்லாத இந்த அரசாங்கத்துடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை ஏன் இன்னமும் இணைந்து செயற்படுகின்றீர்கள். எம்மோடு கைகோருங்கள்.

தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் மிகுந்த கோபத்துடன் உள்ளனர். அரசாங்கத்தின் எந்த செயற்பாடுகளும் மக்களுக்கு விருப்பமில்லை. தேர்தலை நடத்தினால் நிச்சயமாக இவர்கள் தோல்வியை தழுவார்கள் என தெரிந்தே தேர்தலை பிற்போடுகின்றார்கள்.

மக்களுக்கு எவ்வித நன்மைகளையும் பெற்றுக்கொடுக்காத இந்த அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்கவும் இந்த அரசாங்கத்தின் ஆட்சியை கவிழ்க்கவும் காலி முகத்திடலில் நடக்கும் மேதினக் கூட்டத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.