ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா பகுதியின் எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய இராணுவத்துக்குச் சொந்தமான எறிகணை முகாம் ஒன்றின் மீது, இன்று அதிகாலை 4 மணியளவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், அதிகாரி ஒருவர் உட்பட மூன்று இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

அதிகாலையில் திடீரென்று துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதாகவும், எறிகணைக் களஞ்சியத்தின் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தவும் பயங்கரவாதிகள் முயற்சித்ததாகவும், தமது எதிர்த் தாக்குதலில் தற்கொலைத் தாக்குதல் தவிர்க்கப்பட்டதுடன் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் சுமார் நான்கு மணி நேரம் நீடித்ததாகவும், பயங்கரவாதிகள் கொல்லப்பட்டபோதிலும் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருப்பதாகவும் இந்தியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.