இலங்கையிலுள்ள ஒரு முன்னணி மோட்டார் வாகன விற்பனை நிறுவனமாகவும் நாட்டில் Mercedes-Benz வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட பொது விநியோகத்தராகவும் திகழ்ந்து வருகின்ற Diesel & Motor Engineering PLC (DIMO), அண்மையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் Vito வானின் புதிய வடிவத்தை உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்து வைத்துள்ளது.

இந்த அறிமுக நிகழ்வின் ஒரு அம்சமாக, ஒரு தொகுதி Vito வான்கள் முறையே Shangri-La’s Hambantota Resort & Spa மற்றும் Diethelm Travel Lanka (Pvt) Ltd ஆகிய நிறுவனங்களுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் தயாரிக்கப்பட்ட இப்புதிய Vito, புத்தம்புதிய மேற்பாக வடிவமைப்புடன் வெளிவந்துள்ளதுடன் பிரயாணிகள் மற்றும் இரட்டை நோக்கங்களுக்கான பயன்பாட்டு வாகனங்களாக இரு வடிவங்களிலும் கிடைக்கப்பெறுகின்றன. ஏனைய Mercedes-Benz பிரயாணிகள் உபயோக கார் வடிவங்களைப் போலவே 163BHP இயந்திர வலு வாகன வகுப்பில் அதியுச்ச வலுவை வழங்கும் பின்புற சக்கர உந்துகை (Rear Wheel Drive) வானாக Vito திகழ்கின்றது. வாகனத்தை இயக்கும் சக்கரத்தில் (steering wheel), F1 பாணியிலான paddle shifter) களை உபயோகித்து தொழிற்படுத்தக்கூடிய7-speed forward transmission (7-G tronic) தொழில்நுட்பத்துடன் இணைந்த ஒரு இயந்திரத்தைக் கொண்டுள்ளது. 3 தொன் எடை வகுப்பு வாகனங்கள் மத்தியில் அதிகூடிய மொத்த வாகன எடையை (Gross Vehicle Weight) அது கொண்டுள்ளதுடன், அதே அளவுடைய வான்களுடன் ஒப்பிடுகையில், கூடிய சுமையேற்றக்கூடிய திறனையும் கொண்டுள்ளது. லீட்டர் ஒன்றுக்கு 17.2 கிலோ மீற்றர்* (இணைந்த/சராசரி) எரிபொருள் திறனைக் கொண்ட புதிய தலைமுறை Euro 4 Grade III இயந்திரத்தை Vito கொண்டுள்ளது.

வாகனத்தில் பிரயாணம் செய்பவர்களுக்கான அதியுச்ச பாதுகாப்பு, சௌகரியம் மற்றும் சொகுசு ஆகியவற்றின் இணைப்பிற்கான உத்தரவாதத்தை வழங்கும் தனித்துவமான, அதிநவீன அம்சங்கள் மற்றும் உபகரணங்களை புதிய Vito கொண்டுள்ளது. சாரதியின் நித்திரைக் கலக்கத்தை கண்டறிந்து அவரை உசார்படுத்தும் Attention Assist, அதிக காற்று வீசும் சூழ்நிலைகளில் விபத்து ஆபத்துக்களை குறைக்கும் Cross Wind Assist, முன்புற மற்றும் பின்புற disc brake வேகத்தைக் குறைக்க உதவும் நிறுத்திகள், சக்கரத்திலுள்ள காற்றின் அழுத்த கண்காணிப்பு முறைமை (tyre pressure monitoring) சிறந்த இழுவைக் கட்டுப்பாடு (traction control) மற்றும் சாலை ஸ்திரத்தன்மைக்கான (road stability) ESP (இலத்திரனியல் ஸ்திரத்தன்மை முறைமை) உள்ளிட்ட பல தொழில்நுட்பங்களை அது கொண்டுள்ளது. 

உட்புறத்தில் வாகனத்தின் இரைச்சலை சிறப்பாக கட்டுப்படுத்தல், சாரதி மற்றும் பிரயாணிகளுக்கு விமானத்தில் காணப்படும் விமானிகளின் ஆசனத்தை ஒத்த சுயாதீன ஆசனங்கள், சுயாதீன அதிர்வு உறிஞ்சிகளுடன் (shock absorbers) சௌகரியமான suspension போன்ற தொழில்நுட்பங்களையும் Vito கொண்டுள்ளது. Chrome செய்யப்பட்ட radiator grille, மின்சாரத்தின் இயக்கத்துடன் மடிக்கப்படக்கூடிய வெளிப்புற கண்ணாடிகள் இலங்கையில் மோட்டார் வாகனங்களைப் பொறுத்தவரையில் கிடைக்கப்பெறுகின்ற அதிநவீன முகப்பு விளக்கு (headlight) தொழில்நுட்பம், LED ILS (Intelligent Lighting System), LED பின்புற விளக்குகள் (tail lamp), நிறுத்தி விளக்குகள்(brake lamp)மற்றும் குறிகாட்டிகள் (indicator), சிறுவர்களுக்கான பாதுகாப்பு ஆழிகள் (child safety lock) மற்றும் மின்சாரத்தில் இயங்கும் கதவுகள் (sliding door) ஆகியவை அதன் வெளிப்புற தொழில்நுட்ப சிறப்பம்சங்களில் குறிப்பிடத்தக்க சிலவாகும். முன் மற்றும் பின் புற குளிரூட்டல், பன்முக தொழிற்பாடுகளைக் கொண்ட இயக்க சக்கரம், trip computer, மழையின் போது rain sensor, வேக கட்டுப்பாடு (cruise control), பின்புறமாக செலுத்துவதற்கான கமரா (reversing camera), Audio 15 multimedia மற்றும் radio player போன்ற பொதுவான தொழில்நுட்ப அம்சங்களையும் அது கொண்டுள்ளது.

விசேட அறிமுக விலை மற்றும் முதலாவது ஆண்டில் இலவசமான பேணற் சேவையுடன் இப்புதிய Vito சந்தையில் அறிமுகமாக்கப்பட்டுள்ளது. மிகச் சிறந்த எரிபொருள் வினைதிறனைக் கொண்டுள்ள Vito, அதன் இயந்திரம் மற்றும் பொறிமுறையின் நீடித்த தொழிற்பாட்டு ஆயுட்காலத்துடன், 15,000 கிலோ மீற்றர் பிரயாணத்தின் பின்னரான இடைவெளிகளில் விரிவான பேணற்சேவைகளையும் வழங்குகின்றது. அனைத்து உபகரண வசதிகள் மற்றும் தாராளமாகக் கிடைக்கும் உதிரிப்பாகங்கள் மற்றும் பேணற்சேவை மேடைகளுடன் கொழும்பு மற்றும் சியம்பலாபே ஆகிய இடங்களில் அமைந்துள்ள பிரபலமான DIMO விற்பனைக்குப் பின்னரான சேவை மையங்களில் Vito மோட்டார் வாகனங்களுக்கான பேணற்சேவை மற்றும் உதவு சேவைகள் கிடைக்கப்பெறும்.

நாடெங்கிலுமுள்ள Vito மோட்டார் வாகன வாடிக்கையாளர்களுக்கு சௌகரியத்தை வழங்கும் வகையில், பேணற் சேவை மற்றும் உதவு சேவைகளை வழங்குவததற்கு எதிர்காலத்தில் வெளி மாவட்டங்களிலும் பல இடங்களுக்கும் தனது வலையமைப்பை விஸ்தரிப்பதற்கான திட்டத்தை நிறுவனம் கொண்டுள்ளது.

புதிய Vito வான்களின் பன்முக சிறப்புத் தன்மையானது, சந்தையில் பல்வேறு பிரிவுசார் தேவைகளுக்கும் உபயோகிப்பதற்கு உகந்ததாக அதனை மாற்றியமைத்துள்ளது. குறிப்பாக, நாட்டில் தற்போது மலர்ச்சிகண்டு வருகின்ற உல்லாசப் பிரயாணத் தொழிற்துறையை இலக்கு வைத்துள்ளதுடன், ஹோட்டல்களும், சுற்றுலாத் தொழிற்பாட்டாளர்களும் மிகச் சிறந்த சௌகரியம், சொகுசு மற்றும் பாதுகாப்புடன் உல்லாசப் பிரயாணிகளை நாட்டில் நகரங்களுக்கிடையில் அழைத்துச் செல்ல முடியும். 4 அல்லது அதற்கு மேற்பட்ட அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பத்திற்கு நடைமுறைக்கு உகந்த ஒரு வாகனமாகவும் இது காணப்படுவதுடன், நிறுவனங்களும் தமது அன்றாட தொழிற்பாட்டு நடவடிக்கைகளுக்கு இதனை உபயோகிக்க முடியும். அன்றாட செயற்பாடுகள் மற்றும் பணியாளர்/விசேட விருந்தினர்களின் பிரயாணத் தேவைகளுக்கு இதனை உபயோகிக்க முடிவதால் புதிய Vito வாகனங்கள் மூலமாக சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறைகளும் பயனடையவுள்ளன.

HNB குத்தகை வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமான குத்தகைத் திட்டங்கள், விசேட தள்ளுபடிகள் மற்றும் வட்டி வீதங்களை வழங்கும் முகமாக, HNB வங்கியுடன் DIMO கைகோர்த்துள்ளது. அறிமுக நிகழ்வில் உரையாற்றிய DIMO நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே அவர்கள், “உலகில் 1 ஆவது ஸ்தானத்தில் திகழும் ஆடம்பர வர்த்தகநாமமான Mercedes-Benz வழங்கும் நவீன வாகனமான புத்தம்புதிய Vito மோட்டார் வான் வாகனங்களை அறிமுகப்படுத்தி வைப்பதையிட்டு DIMO பெருமையடைகின்றது. பன்முக சிறப்பம்சங்கள், பாதுகாப்பு, சிக்கனம் மற்றும் தரம் ஆகியவற்றின் இணைப்பினை வழங்கி உங்களுக்கு மேலும் சௌகரியம் அளிக்கும் ஒரு வாகனமாக இது அமைந்துள்ளது. 

அனைத்து வகையான Mercedes-Benz வாகனங்களைப் போலவே, பல்வேறு புத்தாக்கமான உதவு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இது வெளிவந்துள்ளதுடன், இந்த வகுப்பைச் சேர்ந்த வேறு எவ்விதமான வாகனமும் தராத அனுபவத்தை உங்களுக்கு வழங்கும். உலகில் பல்வேறு பாரிய நாடுகள் மிகவும் சவால்மிக்க பணிகளுக்காக Vito வான்களை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இலங்கையும் அதற்கு எவ்விதத்திலும் விதிவிலக்கல்ல. DIMO இன் உலக்கத்தரம் வாய்ந்த விற்பனைக்குப் பின்னரான சேவையானது Vito வான்கள் அனைத்தும் சீராகத் தொழிற்படுவதை உறுதிசெய்வதுடன், நீங்கள் செல்ல விரும்பும் இடங்களுக்கு பாதுகாப்பாகவும், சௌகரியமாகவும் பயணிப்பதையும் உறுதி செய்கின்றன” என்று குறிப்பிட்டார்.

பொருட்கள் மற்றும் ஆவணங்களை அனுப்பும் சேவையை வழங்குவதில் உலகில் பாரியதொரு நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற DHL இன் இலங்கை அலுவலகம் தனது தேவைகளுக்கு பெரும் எண்ணிக்கையிலான Vito வான் வாகனத் தொகுதியை பயன்படுத்தி வருவதுடன், அவற்றை கொழும்பு நகரின் வீதிகளில் இலகுவாக காண முடியும். இலங்கையின் வீதிப் போக்குவரத்து மற்றும் காலநிலையை சிறப்பாக சமாளிக்கும் பன்முக சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளதால், Vito ஆனது இலங்கைச் சந்தைக்கு மிகவும் பொருத்தமான ஒரு வாகனமாகக் கருதப்படுகின்றது.