இன்றைய திகதியில் கணவன் மனைவி என இருவரும் வேலைக்கு சென்று வருவாய் ஈட்டினால் தான் ஓரளவிற்காகவது குடும்பத்தை பொருளாதார தடையில்லாமல் ஓடவைக்க இயலும். அதே சமயத்தில் கணவன் மனைவி என இருவரும் பணிக்கு சென்றுவிடுவதால் அவர்களின் குழந்தைகள் வீட்டு பெரியோர்கள், காப்பகங்கள், தாதி பணிப்பெண்கள் என யாரிடமாவது ஒப்படைத்துவிட்டு தான் செல்லவேண்டியதிருக்கிறது. அவர்கள் குழந்தைகளை பராமரிக்கும் போது ஏனைய குழந்தைகளைப் போலவே பொதுமைத் தன்மையுடனேயே கண்காணித்து வளர்க்கிறார்கள். இதன் காரணமாக அவர்கள் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் சிறுநீர் மற்றும் மலம் கழித்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு டயாப்பர் எனப்படும் உறையினை அணிவித்துவிடுகிறார்கள்.

ஒரு சில குழந்தைகளுக்கு இது அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றன. வேறு சில குழந்தைகளுக்கு இது சரும நோயை ஏற்படுத்துகின்றன. அதிலும் குழந்தைகள் தூக்கத்தில் சிறுநீர் கழிப்பார்கள். வீட்டிலுள்ளவர்களிள் பராமரிப்பில் வளரும் குழந்தையாக இருந்தால் அவர்களின் துணியை உடனடியாக மாற்றிவிடுவார்கள். அத்துடன் தூய பருத்தியாலான துணியை கட்டிவிடுவர். ஆனால் குழந்தைகள் காப்பகத்தில் இது சாத்தியமில்லை. அங்கு அனைத்து குழந்தைகளுக்கும் டயாப்பர் எனப்படும் உறையினை அணிவித்துவிடுவர். இது போன்ற டயாப்பர் அணியும் குழந்தைகள் சிறுநீர் கழித்தால் அது அதிலேயே தங்கிவிடும். இந்நிலையில் இது போன்று ஈரப்பதத்துடன் டயாப்பர் இருப்பதால், குழந்தைகளின் பிறப்புறுப்பு பகுதி, பின்புறங்கள், தொடைப் பகுதி ஆகியவை சிவந்துவிடக்கூடும். இதனை கவனியாது இருந்தால் தொடை மற்றும் கால்களின் தோல் பகுதியில் சிவப்பு புள்ளிகள் தோன்றும். பிறகு தோல் தடிப்பு ஏற்பட்டு வலி மற்றும் எரிச்சல் கூட ஏற்படும். இதனையும் கவனியாது விட்டால் அவை வீக்கம் எற்பட்டு, கொப்புளங்கள் தோன்றும். இதன் வழியாக  பலவகையினதான நோய் தொற்றுகள் உடலுக்குள் சென்றுவிடக்கூடிய வாய்ப்பும் உண்டு. அத்துடன் இவை குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கக்கூடிய காரணியாகவும் உருவெடுக்கக்கூடும். எனவே டயாப்பரை பயன்படுத்தினால் அதில் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். பயணத்தின் போது, வீட்டில் ஏதேனும் சுபநிகழ்வுகளின் போதும், விருந்தினர்களின் வருகையின் போது என சில தவிர்க்க முடியாத தருணங்களில் மட்டும் குழந்தைகளுக்கு டயாப்பரை போடலாம். அதே போல டயாப்பரை நான்கு மணித்தியாலத்திற்கு ஒரு முறை கழட்டி புதியனவற்றை மாட்டிவிடவேண்டும். 

Dr. குமுதா

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்