அரசாங்கம் கல்வித்துறையை தனியார் மயமாக்கும் திட்டத்தை மேற்கொள்ள முயற்சித்தால் பாரிய பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்துக்கு செல்வோம் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், இலங்கை அதிபர் சேவை சங்கம் மற்றும் அகில இலங்கை ஆசிரிய கல்வி சேவை சங்கம் என்பன இணைந்து இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

அரசாங்கத்தின் கல்விக்கொள்கை தொடர்பில் பாரிய விமர்சனம் இருந்துவருகின்றது. குறிப்பாக கல்வித்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை அரசாங்கம் மிகவும் திட்டமிட்டமுறையில்  மேற்கொண்டு செல்கின்றது.  இது எமது எதிர்கால மாணவர்களுக்கு இலவச கல்வியை அனுபவிக்க முடியாத நிலையை ஏற்படுத்தும். அதனால் அரசாங்கத்தின் கல்விக்கொள்கை தொடர்பாக சகல தொழற்சங்கங்களும் இணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். 

அரசாங்கம் ஏனைய துறைகளை தனியார் மயமாக்குவதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைபோன்று கல்வித்துறையில் கைவைத்தால் சகல தொழிற்சங்கங்களையும் இணைத்துக்கொண்டு பாரிய பணி பகிஷ்கரிப்புக்கு செல்வோம் அதனால் கல்வித்துறையில் கொள்கை ரீதியான மாற்றங்களை மேற்கொள்ளும்போது தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடவேண்டும் என்றார்.