மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிந்ததன் காரணமாக அனர்த்தத்திற்குள்ளான குடும்பங்களுக்கு தற்காலிக வீடுகளைப் பெற்றுக்கொள்வதற்காக மாதாந்தம் வழங்கப்படவுள்ள 50,000 ரூபாவை மூன்று மாதங்களுக்கும் ஒரேதடவையில் அக்குடும்பங்களுக்குப் பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரைவிடுத்தார்.

தற்காலிக வீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கு செலுத்தப்பட வேண்டிய முற்பணம் செலுத்தும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பு மற்றும் கொழும்பை அண்மித்த பிரதேசங்களில் கழிவு முகாமைத்துவத்தை முறைப்படுத்துவது தொடர்பாக இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்தப் பணிப்புரையை விடுத்தார்.

கழிவு முகாமைத்துவம் தொடர்பாக உள்ளூராட்சி நிறுவனங்கள் தயாரித்துள்ள திட்டங்களை முன்வைக்குமாறு இதன்போது அதிகாரிகளிடம் தெரிவித்த ஜனாதிபதி, அனைத்து மாகாண உதவி ஆணையாளர்களையும் தம்முடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுமாறும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

மேலும் கழிவு முகாமைத்துவம் தொடர்பாக பயிற்சி மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக கடந்த ஐந்து வருடகாலப்பகுதியில் வெளிநாடுகளுக்கு சென்ற அதிகாரிகள் தொடர்பாக ஒரு அறிக்கையை தமக்கு சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி சுற்றாடல் அதிகாரசபைக்கு பணிப்புரை விடுத்தார்.

மீதொட்டமுல்லை குப்பைமேட்டின் நிலைமை தற்போது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் இரண்டு மாதகாலப்பகுதியில் அதுதொடர்பான இறுதி முடிவுக்கு வரமுடியும் என்றும் இங்கு கருத்துத் தெரிவித்த நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

கழிவு முகாமைத்துவத்திற்காக கொழும்பு மா நகரசபை எதிர்வரும் காலங்களில் பின்பற்றவுள்ள முறைமைகள் தொடர்பாகவும் இங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டதுடன், குப்பைமேடுகள் உருவாவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது எனவும் அதிகாரிகள் ஜனாதிபதியிடம் உறுதியளித்தனர்.

இக்கலந்துரையாடலில் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியரத்ஷன யாப்பா, பாட்டலி சம்பிக்க ரணவக்க, சஜித் பிரேமதாச, பைசர் முஸ்தபா, சாகல ரத்நாயக்க, வஜிர அபேவர்தன, பிரதி அமைச்சர் லசந்த அழகியவன்ன, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், ஜனாதிபதியின் செயலாளர் பி பீ அபேகோன் உள்ளிட்ட அமைச்சின் செயலாளர்கள், முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.