இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்திய  வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் இன்று செவ்வாய்க்கிழமை இலங்கை வருகின்றார். 

இலங்கை - இந்திய கூட்டு ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை ஆராய்வதற்கும் அதற்கான முன்னேற்பாடுகளை பார்வையிடுவதற்குமே வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் இலங்கை வருகின்றார். 

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க   வெளிவிவகார அமைச்சர் மங்கள் சமரவீர உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன்  சந்திப்புகளை  முன்னெடுக்கவுள்ளவுள்ளார். 

அத்துடன்  எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினரையும் இன்றைய தினம் இந்திய  வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் சந்திக்கவுள்ளார்.  

எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ள இலங்கை - இந்திய கூட்டு ஆணைக்குழுவின்  சந்திப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் உள்ளிட்ட இந்திய உயர் மட்ட குழு கலந்துக்கொள்ள உள்ள நிலையில் அது தொடர்பான ஏற்பாடுகளையும் இதன் போது  ஜெய்சங்கர் ஆராயுவுள்ளார். 

பொருளாதாரம் வர்த்தகம் உள்ளிட்ட    இரு நாட்டு பல் துறைசார் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை - இந்திய கூட்டு ஆணைக்குழு எதிர்வரும் பெப்ரவரி மாதம் கொழும்பில் நடைப்பெறவுள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்திய  வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர், அரசாங்கத்தின் உயர் மட்டத்தினருடனான சந்திப்புகளின் போது , இரு நாடுகளுக்கு இடையிலான  மீனவர் பிரச்சினை  மற்றும்  இலங்கைக்கான இந்தியாவின் புதிய முதலீடுகள் என்பவை தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது .

இதே வேளை , இந்தியாவுடன் இலங்கை கையெழுத்திடப்பட உள்ள வர்த்தக தொழில் நுட்ப உடன்படிக்கை தொடர்பில் உயர் மட்ட பேச்சுவாரத்தைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.