தேசிய பாதுகாப்பை பலப்படுத்த போர்விமானங்கள் தேவைப்படுகின்றன. ஆனால் அதை இந்தியாவிடம் இருந்து வாங்குவதா அல்லது பாகிஸ்தானிடம் இருந்து வாங்குவதா என்பது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கவில்லை என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.  

போர்ச் சூழலிலோ அல்லது அமைதிக்கால சூழலிலோ பாதுகாப்பை பலப்படுத்தி பேணுவது ஒரு நாட்டின் கொள்கையெனவும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

பாகிஸ்தானில் இருந்து எட்டு ஜே.எப். 17 போர் விமானங்களை இலங்கை அரசாங்கம் கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கையை கைச்சாத்திட்டுள்ளதாக இந்திய மற்றும் பாகிஸ்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ள நிலையில் இலங்கை பாதுகாப்பு தரப்பு அந்த செய்தியை மறுத்துள்ளது. 

அது தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவிக்கையில், 

இலங்கையில் இன்று போர்க்கால சூழல் ஒன்று இல்லாத நிலையில் நாட்டில் பாதுகாப்பை பலப்படுத்த அவசியமில்லை என கருத முடியாது. போர்க்கால சூழலிலும் அதேபோல் அமைதிகால சூழலிலும் நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். எமது விமானப்படை பலமானதாக உள்ளது. எனினும் அவர்களுக்கான மேலதிக பயிற்சிகள் மற்றும் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு போர் விமானங்கள் அவசியமாகின்றன.   நாமும் தேசிய பாதுகாப்பு விடயத்தில் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றோம். 

அந்த வகையில் போர் விமானங்களை நாம் கொள்வனவு செய்யவேண்டிய  தேவை உள்ளது. ஆனால் அதை பாகிஸ்தானிடம் இருந்தா அல்லது இந்தியாவிடம் இருந்தா கொள்வனவு செய்வது என்பது தொடர்பில் இன்னும் எமது அரசாங்கம் தீர்மானிக்கவில்லை. எனினும் இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. 

ஆனால் ஊடகங்கள் வெளியிட்டு வரும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பான ஒன்றாகும். நாம் அவ்வாறு இரகசியமான உடன்படிக்கைகளை கைச்சாத்திட இல்லை என அவர் குறிப்பிட்டார்.