போலி ஆயிரம் ரூபா நோட்டுக்கள் ஐந்துடன் நபரொருவரை பிபிலைப் பொலிசார் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.

பிபிலை மதுபானம் விற்பனை செய்யும் நிலையமொன்றில் நபரொருவர் ஆயிரம் ரூபா நோட்டுக்கள் இரண்டைக் கொடுத்து மதுபானங்களைப் பெற முயற்சித்துள்ளார். 

பெற்றுக்கொண்ட ஆயிரம் ரூபா நோட்டுக்களில் சந்தேகம் கொண்ட மதுபானம் விற்பனை நிலை பொறுப்பாளர் அது குறித்து பிபிலைப் பொலிசாருக்கு புகார் செய்தார்.

இப் புகாரையடுத்து உடனே விரைந்த பொலிசார்  மதுபானம் விற்பனை நிலையத்திற்கு வழங்கப்பட்ட இரு ஆயிரம் ரூபா நோட்டுக்களை மீட்டதுடன்  அந்த நோட்டுக்களை வழங்கிய நபரையும் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட நபரின் மேலாடை பையை சோதனையிட்ட பொலிசார் மேலும் மூன்று ஆயிரம் ரூபா நோட்டுக்களையும் கைப்பற்றினர்.

இந் நோட்டுக்கள் ஐந்தும் ஒரே தொடர் இலக்கங்களைக் கொண்டதாக அமைந்திருந்ததினால் இவைகள் போலி நோட்டுக்களாகுமென்று பொலிசார் தெரிவித்தனர்.

பிபிலைப் பகுதியின் 36 ஆவது மைல் கல்லருகே மரண வீடொன்றில் சூதாட்டங்களில் ஈடுபட்டிருந்த நபரே

மதுபானங்களை வாங்குவதற்கு வந்து கைது செய்யப்பட்டிருப்பவராவார்.

கைது செய்யப்பட்ட நபர் தீவிர புலன் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். 

மூன்று தினங்களுக்கு முன் லுணுகம்வெகெர மற்றும் புத்தலை ஆகிய இடங்களில் போலி ஐயாயிரம் ரூபா நோட்டுக்களுடன் கைது செய்யப்பட்ட மூவரும் பிபிலைப் பகுதியைச் சேர்ந்தவர்களாகையினால் நேற்று பிபிலையில் கைது செய்யப்பட்ட நபருக்கும்  போலி ஐயாயிரம் ரூபா நோட்டுக்களுடன் கைது செய்யப்பட்ட மூவருக்குமிடையில் தொடர்புகள் உள்ளனவா என்பது குறித்தும் பொலிசார் ஆராய்ந்து வருகின்றனர்.