சமூக உடன்பாட்டு சிறப்பு விருதுகள் 2015 விருது வழங்கும் நிகழ்வில் பிராந்தியத்தின் முன்னணி ஆடை உற்பத்திகளை மேற்கொள்ளும் நிறுவனமான டெக்ஸ்சர்ட் ஜேர்சி நிறுவனம் சமூக உடன்பாடு மற்றும் பணியிட ஒத்துழைப்புக்கான தங்க விருதினை வென்றது.

இந்த விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் தாமரைத் தடாகத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

இந்த மதிப்பு மிக்க சமூக உடன்பாட்டு சிறப்பு விதுகள், சமூக உடன்பாடும் தொழில்புரியும் இடத்தில் தொழிலாளர்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் தொழில் திணைக்களப் பிரிவு மற்றும் தொழில்துறை தொடர்பு ஆகிய பிரிவுகளிலுள்ள முன்னணி தேசிய நிறுவனங்களை கௌரவிக்கும் முகமாகவே இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விருது வழங்கும் நிகழ்வில் பாரிய அளவிலான உற்பத்திப் பிரிவில் தனியார் நிறுவனங்கள் மற்றும் பகுதியளவிலான அரச நிறுவனங்களோடு டெக்ஸ்சர்ட் ஜேர்சியும் போட்டியிட்டு முதலாம் இடத்தைப் பெற்று விருது வென்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த விருது வழங்கும் நிகழ்வில் நிபுணத்துவம் கொண்ட நடுவர் குழுவினர், போட்டியிட்ட நிறுவனங்களை ஆடைத் தொழில், உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் ஆகியவற்றை சிறிய, நடுத்தர மற்றும் பெரிய பிரிவுகளின் கீழ் தெரிவு செய்திருந்தனர்.

இதில் டெக்ஸ்சர்ட் ஜேர்சி பாரிய உற்பத்திப் பிரிவில் தங்க விருதை வென்றெடுத்தது. அதேவேளை MAS Stretch Line மற்றும் Link Natural உற்பத்திகள் ஆகியன முறையே வெள்ளி மற்றும் வென்கல விருதுகளையும் வென்றெடுத்தது.

இந்த விருது வழங்கும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அதேநேரம் தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர மற்றும் கட்டுமானத்துறை அமைச்சின் செயலாளர் கோட்டாபய ஜயரட்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த டெக்ஸ்சர்ட் ஜேர்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்ரீயான் டி சில்வா விஜேரட்ன,

“இந்த விருது நிறுவனத்திற்கு ஓர் பெருமையை சேர்த்துள்ளதுடன் எமது தொழிலாளர்களுக்கும் சிறந்ததொரு சூழலை அமைத்துக் கொடுக்கவும் முடிந்துள்ளது.

தொழிலாளர்களின் திருப்தியே எமது முக்கிய காரணியாக அமைவதோடு ஒரு சிறந்த வேலைத் தளத்தை அமைத்துக் கொடுப்பதன் மூலம் எமது வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த சேவையை வழங்க முடியும்.” எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின்போது முதலாளி, தொழிலாளி மற்றும் பெருநிறுவன துறையில் சமூக உரையாடலின் பங்கின் முக்கியத்துவம் குறித்து சிறப்பித்துக் காட்டும் முகமாக “Manabandhana Wedawarjana”  நாடகம் மற்றும் நடன நிகழ்வும் அரங்கேற்றப்பட்டமை விசேட அம்சமாகும். இந்த நாடகத்தை டெக்ஸ்சர்ட் ஜேர்சி நிறுவனத்தின் திறமையான ஊழியரான அசங்க சயக்காரவும் அவரது குழுவினரும் அரங்கேற்றியமை குறிப்பிடத்தக்கது. 

அத்தோடு இதில் கலந்து கொண்ட ஏனைய நிறுவனங்களான Polytex, Maliban, GP Garment, MAS Linea ஆகியவற்றின் ஊழியர்களும் தமது திறமைகளை மேடையில் அரங்கேற்றினர்.