கனகராயன்குளம் பொலிஸ் நிலையப் பிரிவில் உள்ள குறிசுட்டகுளம், படுகட்டுக்குளம் பகுதியில் உள்ள கோவிலுக்கு  தனது நண்பர்களுடன் குளத்தின் அணைக்கட்டு வழியாக நடந்து சென்ற சிறுவன் ஒருவன் சறுக்கிவீழ்ந்து குளத்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.

இதனையடுத்து சக நண்பர்களான சிறுவர்கள் கிராமத்திற்கு ஓடிவந்து தகவலை தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கிராமத்தவர்கள் குளத்திற்கு சென்று சிறுவனை மீட்ட போது, சிறுவன் உயிரிழந்த நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தில் தரம் 5 இல் கல்வி கற்று வரும் குறிசுட்டகுளம் கிராமத்தைச் சேர்ந்த பாலச்சந்திரன்  கவிப்பிரியன் (வயது 10) என்ற சிறுவனே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.