வவுனியாவில் இளைஞர் ஒருவர் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு பொதுமக்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குறித்தப் பகுதியில் சிறிது நேரம் பற்றநிலை நிலவியது.

நேற்றிரவு 10 மணியளவில் வவுனியாவில் இருந்து கோவில்குளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் இரு இளைஞர்கள் சென்றுக்கொண்டிருந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளினை செலுத்தியவர் தலை கவசம் அணிந்திருந்த போது பின்னால் இருந்தவர் தலை கவசம் இல்லாது சென்றுள்ளார்.

ரோயல் விருந்தினர் விடுதிக்கு முன்பாக கடமையில் இருந்த போக்குவரத்து பொலிசார் இவர்களை மறித்த போது மோட்டார் சைக்கிளினை நிறுத்தாது சென்றுள்ளனர். பின் தொடர்ந்த போக்குவரத்து பொலிஸார் வழி மறித்தும் பின்னால் அமர்ந்து சென்ற நபரை தாக்கியுள்ளனர். இதனையடுத்து மற்றைய இளைஞர் மோட்டார் சைக்கிளுடன் தப்பிச் சென்றுள்ளார்.

இளைஞனை பொலிஸார் தாக்குவதை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.