தனது தந்தையை 70 தடவைகள் கத்தியாலும் கோடரியாலும் குத்தியும் வெட்டியும் கொன்ற பதின்ம வயது இளம் பெண்ணுக்கு பத்து வருட சிறைத் தண்டனை வழங்கி அவுஸ்திரேலிய நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

பொனி சொயர் தோம்சன் என்ற இளம் பெண், பிலிப் மிஃப்சுட் என்ற இளைஞரைக் காதலித்து வந்தார். போதைப் பழக்கம் மற்றும் துர்நடத்தையுள்ள பிலிப், பொனியை பலமுறை வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.  வெற்றுத் துப்பாக்கி ரவைகளை பொனியை விழுங்கச் செய்தும், உடலில் சிகரெட்டால் சுட்டும், தலையில் மதுப் போத்தலை அடித்து உடைத்தும், பட்டாசைக் கொளுத்தி பொனியின் உள்ளாடைக்குள் இட்டும் கடும் சித்திரவதைகளைச் செய்து வந்திருக்கிறார்.

இவற்றைத் தாங்க முடியாத பொனி, குடும்பத்தைக் காரணம் காட்டி பிலிப்பை விலக நினைத்தார். இதற்கு உடன்படாத பிலிப், பொனியின் குடும்பத்தைக் கொன்றுவிடுமாறு தூண்டியிருக்கிறார். 

இதற்காக பொனியின் வீட்டுக்குச் சென்ற பிலிப், பொனியின் உடலில் வலுக்கட்டாயமாக ஊசி மூலம் போதை மருந்தை ஏற்றினார். பின்னர், பொனியின் தந்தையுடன் சேர்ந்து பிலிப்பும் போதை மருந்தை உட்கொண்டார்.

போதை தலைக்கேறிய பொனியிடம் தந்தையைக் கொல்லுமாறு கூறிவிட்டு பிலிப் வெளியேறிவிட்டார். மயக்கத்தில் இருந்த பொனி, கத்தியொன்றை எடுத்து தனது தந்தையை மாறி மாறிக் குத்தியதுடன், கோடரியொன்றை எடுத்து வெட்டியும் கொன்றார்.

2014ஆம் இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்த வழக்கின் தீர்ப்பு நேற்று (20) வழங்கப்பட்டது. அதில், பொனிக்கு பத்து வருட சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது. போதிய ஆதாரங்கள் இல்லாததால் நீதிமன்றம் பிலிப்பை விடுதலை செய்தது.