ஜனாதிபதியின் சீரற்ற ஆட்சியை எதிர்த்து இலட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதனால் வெனிசுவேலா கடந்த இரண்டு நாட்களாக கலவர பூமியாக இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. 

வெனிசுவேலாவின் முன்னாள் ஜனாதிபதி ஹியூகோ சவோஸ், கடந்த 2013 ஆம் ஆண்டு மரணமடைந்ததை தொடர்ந்து, நிக்கோலஸ் மாதுரோ அந்நாட்டின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார். 

இந்நிலையில் சவோஸ் ஆட்சியை விட நிக்கோலஸ் மாதுரோவின் ஆட்சியில் பல்வேறுபட்ட அரசியல் குழப்பங்களும், நாட்டின் பொருளாதாரத்தில் சடுதியான வீழ்ச்சியும் ஏற்படவே, அந்நாட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு அரச எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களை நிக்கோலஸ் மாதுரோ பலவந்தமாக சிறையில் அடைப்பதற்கு உத்தரவிட்டிருந்தார். அத்தோடு நாட்டில் அடிப்படை பொருட்களை வாங்குவதற்கு மக்களிடம் பண பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதோடு, பணவீக்கம் அதிகரித்த வண்ணமிருப்பதால், ஜனாதிபதியை பதவி விலககோரி அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

வெனிசுவேலா தலைநகர் கராகஸ், மற்றும் முக்கியநகரான சான் கிறிஸ்டோபல் உள்ளிட்ட பெரும்பாலான நகரங்களில் மக்கள்வீதிகளில் திரண்டு போராட்டம் நடத்திவருகின்றனர்.

அத்தோடு குறித்த போராட்டத்தை தடுப்பதற்காக அந்நாட்டு பாதுகாப்பது படையினர் நடத்திய தாக்குதலில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன், அதிகளவான போராட்டத்தாரர்கள் காயமுற்றுள்ளனர்.

மேலும் தலைநகர் கராகஸ்ஸில் ஜனாதிபதி ஆதரவாளர்கள் கூடி போராட்டக்காரர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நிலை ஏற்பட்டுள்ளதோடு, போராட்டத்தை தடுப்பதற்கு பாதுகாப்பது தரப்பினர் கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொள்வதால், போராட்டக்காரர்கள் பெற்றோல் குண்டு தாக்குதல்களை நடத்தி பதற்ற நிலையை அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.