வீதியைக் கடப்பதற்காக வீதியின் நடுவில் இடப்பட்டிருந்த தடுப்பின் நடுவில் காத்திருந்த மக்களின் மீது கண்மூடித்தனமாக மோதிய காரினால், மூன்று வயது குழந்தையும் அதன் தாயாரும் இறந்த சம்பவம் மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புனேயில் உள்ள பானேர் பகுதியில் கடந்த திங்கள் அன்று மதியம் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள போக்குவரத்துக்கு நெருக்கடி மிகுந்த வீதியொன்றில் மதியம் 2.45 மணியளவில், ஐந்து பேர் வீதியை கடக்கும் பொருட்டு, ஒரு முனையில் இருந்து வீதியில் மத்தியில் உள்ள தடுப்புக்கு வந்து நின்று கொண்டிருந்தனர். போக்குவரத்து குறைவதற்காக அவர்கள் காத்திருந்த பொழுது, வேகமாக வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதியது.

இதில் மூன்றே வயது நிரம்பிய இஷா எனும் பெண் குழந்தை சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அதன் தாயார் பூஜா என்பவரும் நேற்று மரணமடைந்துள்ளார்.

விபத்தில் படுகாயம் அடைந்த சஜித், அவருடைய சகோஹரி நிஷா, நிஷாவின் மகன் சையத் அலி ஆகியோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த வாகனத்தினை செலுத்தி வந்த சுஜாதா ஷெராப் என்னும் பெண் கைது செய்ப்பட்டுள்ளார். வாகன ஒட்டி வந்த பொழுது திடீரென்று கண்ணயந்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். பொலிஸார் குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றன.