அமெரிக்காவில் பணியாற்றுவதற்கு வழங்கப்பட்டு வந்த H -1B தொழில்சார் விசாமீது கட்டுபாடுகளை விதிக்கும் சட்டவாக்கத்தில் கையொப்பமிட்டுள்ளார் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்.

அமெரிக்காவில் பல்வேறு தொழிநுட்ப மற்றும் துறைசார் பணிகளில் வெளிநாட்டினரின் பங்கை குறைத்து உள்நாட்டு தொழிலாளர்களுக்கு வாய்ப்பளிப்பதற்கு H -1B விசா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்திருந்தமைக்கு ஏற்ப அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாநிலத்தில் வைத்து உடனடியாக அமுலில் வரும்படியான புதிய விசா கட்டுபாட்டுச் சட்டத்தில் கையொப்பமிட்டுள்ளார். 

மேலும் அமெரிக்காவில் வேலை செய்வதற்காக விசா கேட்டு விண்ணப்பிக்கும் வெளிநாட்டினரின் பெயர்கள், H-1B முறையின் மூலம் இடம்பெறும் குலுக்கலின் ஊடாக தெரிவு செய்யப்படுகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் வேலை செய்ய விரும்புவர்களுக்கு, அதிக சம்பளம் வாங்கும் அளவுக்கு தத்தமது துறைகளில் மிகவும் தேர்ச்சி பெற்ற வல்லுனர்களுக்கு மட்டுமே இனிமேல் பணிநிலை விசாக்கள் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த விசாக்களை வழங்கும் அதிகாரமானது அமெரிக்க உள்துறை அமைச்சர், தலைமை சட்டமா அதிபர், தொழிற்துறை அமைச்சர், உள்நாட்டு பாதுகாப்புத்துறை தலைமை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு ஏப்ரல் மாதத்தில், இதுவரை சுமார் 2 இலட்சம் வெளிநாட்டினர், தொழில்சார் விசா கேட்டு விண்ணப்பித்துள்ளனர். குறித்த விண்ணப்பங்கள் தொடர்பான பரிசீலனை இனி ஜனாதிபதியால் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள புதிய குழுவினரிடமே உள்ளது. 

குறித்த சட்டவாக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப், அமெரிக்க தயாரிப்புகள் அனைத்தும் அமெரிக்க தொழிலாளர்களால் உருவாக்கப்பட வேண்டும். அமெரிக்க பொருட்களை வாங்குங்கள் என்ற முழக்கத்தை தனது தலைமையிலான அரச அதிகாரிகள் இனி முழுமையாக நடைமுறைப்படுத்துவார்கள் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.