கோடைக்காலம் வந்துவிட்டது. வீட்டிலுள்ள சிறார்களின் உடலில் வியர்க்குரு வரும். இதனை தவிர்க்க பெற்றோர்கள் தினமும் இரண்டு முறை குளிக்கவைத்து, பவுடர் பூசிவிடுவார்கள். ஆனால்இது குறித்து மருத்துவர்கள் தரும் எச்சரிக்கை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

கோடைக்காலத்தில் மட்டுமல்ல எப்போது வேண்டுமானாலும் உடல் வியர்க்கலாம். வியர்வை வெளியாகும் போது தான் உடலில் உள்ள வெப்பநிலை சமன்படுத்தப்படுகிறது. அதாவது அதிக உஷ்ணத்தை சீராக்குவதற்காகத்தான் வியர்க்கிறது. பெற்றோர்கள் சிறார்களை குளிப்பாட்டலாம். ஆனால் எதற்காக பவுடரை பூசிவிடுகிறீர்கள். இந்த பவுடர் உடலில் உள்ள வியர்வை துவாரங்களை அடைத்துவிடுகின்றன. இதனால் போதிய அளவிற்கு வியர்வை வெளியேறாது. இதன் பின்விளைவாக வேனல் கட்டிகள் ஏற்படக்கூடும். பவுடர் மட்டுமல்ல சந்தையில் கிடைக்கும் வேறு கிறீம்கள், லோஷன்கள் ஆகியவற்றையும் போட்டுக்கொள்ளக்கூடாது. இவை தோலுக்கும் உடலுக்கும் தீங்கு விளைவிப்பவை. அதிலும் 4 மாத குழந்தைகளுக்கு வியர்வை சுரப்பிகள் முழுமையாக வளர்ச்சியடைந்திருக்காது. அவர்களுக்கு நீங்கள் பவுடர் பூசினால் என்னவாகும்? அதே போல தோலில் சுருக்கம் வந்திருக்கும் முதியவர்களுக்கு வியர்வை சுரப்பிகளின் செயல்பாடு குறைந்திருக்கும். அதனால் இவ்விருவர்களுக்கும் பவுடரை பயன்படுத்தக்கூடாது. 

உடனே எம்முடைய பெற்றோர்கள் வேறு என்ன செய்யலாம்? என்று மனதிற்குள் கேட்பர்.குளித்து முடித்தவுடன் கை மற்றும் கால்களில் சிறிதளவு சுத்தமான தேங்காய் எண்ணெயைத் தடவிக்கொள்ளலாம். இதனை தொடர்ந்தால் வியர்க்குரு கட்டி வராது.

Dr. ஜெகதீசன்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்