(ஜவ்பர்கான்)

பிரித்தானிய பாராளுமன்றத்தைச் சேர்ந்த டாக்டர் ஜென்னி டொங்கே தலைமையிலான 9 உறுப்பினர்கள் கொண்ட குழு இன்று காலை மட்டக்களப்பிற்கு விஜயம் செய்தனர். 
இலிங் சௌத்தல் பாராளுமன்ற உறுப்பினர் விரேந்திர சர்மா லண்டன் பாராளுமன்ற ஒன்றியத்தைச்சேர்ந்த நிகல் இவான்ஸ் உட்பட 5 பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக இக்குழுவில் அடங்கியிருந்தனர்.


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த இவர்கள் இனப்பெருக்கம் மற்றும் பாலியில் சுகாதாரம் தொடர்பான மீளாய்வு சந்திப்பில் கலந்து கொண்டனர். 
வைத்தியாசாலை பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.இப்றாலெப்பை தலைமையில் நடைபெற்ற சந்திப்பில் இலங்கை குடும்ப திட்ட சங்க தலைவி பெமிலா சேனநாயக்க வைத்திய நிபுணர் கே.கடம்பநாதன் உட்பட வைத்திய நிபுணர்கள், வைத்தியதிகாரிகள், தாதிய உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


போதனா வைத்தியசாலையின் கீழ் இயங்கும் மிதுறு பியச நட்பு இல்லத்தினூடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இனப்பெருக்கம் மற்றும் பாலியில் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்ஆலோசனைகள் வழங்கப்படும் இலங்கையின் சிறந்த நிலையமாகவும் முதன்மை நிலையமாகவும் மட்டக்களப்பு நட்பு இல்லம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்களால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நிதி உதவிகள் வழங்கப்படவுள்தாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.