பேருந்தில் பயணித்த சிறுபான்மையினத்தைச் சேர்ந்த பயணி மீது கொலை வெறித்தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டு பேருந்தில் இருந்து இழுத்து வீதியில் வீசப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் கடந்த 15 ஆம் திகதி இரவு 10.20 மணியளவில் பொலநறுவை, செவனப்பிட்டிய என்ற பகுதியில் இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டியொன்றை வீதிக்குக் குறுக்கே நிறுத்தி பேருந்தை சுற்றி வளைத்த ஏழுக்கும் மேற்பட்ட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தோரே வவுனியாவிலிருந்து மட்டக்களப்பை நோக்கிப் பிரயாணித்த சிறுபான்மைனித்தவர் ஒருவரை இவ்வாறு பலவந்தமாக அடித்து இழுத்துச் சென்று தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

பலமாக தலையில் தாக்கப்பட்டு உணர்வற்ற நிலையில் வீதியோரத்தில் வீசப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த குறித்த பயணியை அதே பேருந்தில் பயணித்த சக பயணிகளும் நடத்துனரும் உடனடியாக வெலிக்கந்த வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்தனர்.

பின்னர் உடனடியாக தாக்குதலில் காயமடைந்த பயணி அம்பியூலன்ஸ் வண்டி மூலமாக மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

முல்லைத்தீவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச்சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்திலேயே இச்சம்பவம் நடந்தேறியுள்ளது.

இச் சம்பவம் குறித்து குறித்த பேருந்தில் பயணித்த பிரயாணியொருவர் தெரிவிக்கையில்,

சம்பவம் காரணமாக எமது பிரயாணமானது இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக தாமதப்படுத்தப்பட்டதோடு கடுமையான அசௌகரியத்துக்கு ஏனைய பிரயாணிகள் உள்ளாக்கப்பட்டனர்.

இக் குற்றச்செயலை சர்வசாதாரணமாகவும் துணிகரமாகவும் மேற்கொண்டோர் ஏ.பீ. கே. 6097 இலக்கமுடைய முச்சக்கரவண்டியிலேயே தப்பிச் சென்றனர்.

மிகவும் அச்சமடைந்த நாம் 119 மற்றும் அண்மையிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு உடன் தொடர்பு கொண்ட போதும் 45 நிமிடங்களின் பின்னரேயே பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.

வவுனியாவிலிருந்து பேருந்தில் ஏறிய செவனப்பிட்டியைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் தாக்குதலில் காயமடைந்த பிரயாணிக்கும் இடையில் வவுனியாவில் வைத்து பேருந்தில் ஏற்பட்ட சிறியதொரு வாக்குவாதத்துக்கு பழிதீர்க்கவே இச்சம்பவம் இடம்பெற்றதாக தாக்குதல் நடத்தியவர்கள் சத்தமிட்டுச் சென்றிருந்தனர்.

சாரதி, நடத்துனர் மற்றும் நாமனைவரும் வெலிக்கந்தைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப்பதிவு செய்ததோடு முச்சக்கரவண்டி இலக்கத்தையும் தெரிவித்தோம். குறித்த பேருந்தில் பிரயாணிகளின் பாதுகாப்புக்கருதி கண்காணிப்புக் கமரா பொருத்தப்பட்டிருந்ததென தெரிவித்திருந்தார்.