(எம்.ஆர்.எம்.வஸீம்)

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவு தொடர்பாக ஆராய்வதற்கு ஜப்பான் தொழிநுட்ப பிரிவொன்று இலங்கைக்கு அனுப்பிவைக்கவுள்ளதாக ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார். 

குப்பை மேடு சரிவு தொடர்பாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பிவைத்துள்ள விசேட அறிவிப்பினூடாகவே இதனை தெரிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவு பேரழிவுக்கு முகம் கொடுத்துள்ள மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம். அத்துடன் அனர்த்தத்துக்கு ஆளாகிய மக்கள் மீண்டும் சாதாரண வாழ்க்கைக்கு திரும்பும் வகையில் ஜப்பான் பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றது.

மேலும் குப்பை பேடு சரிவு தொடர்பாக ஆராய்வதற்காக ஜப்பானின் விசேட தொழிநுட்ப குழுவொன்றை மிக விரைவாக அனுப்பிவைக்கப்படவுள்ளது. அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எவ்வாறு இடம்பெறவேண்டும் என்பது தொடர்பக ஜப்பான் தொழிநுட்ட பிரிவினர் ஆலோசனை தெரிவிக்கவுள்ளனர்.

மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவு காரணமாக உயிரிழப்புக்கள் மற்றும் சொத்திழப்புக்கள் இடம்பெற்றுள்ளதுடன் பலர் காயங்களுக்கு ஆளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.