(எம்.எப்.எம்.பஸீர்)

ரஷ்ய நாட்டு யுவதிகளை மிக சூட்சுமமாக இந் நாட்டில் விபசார நடவடிக்கையில் ஈடுபடுத்தும் சட்ட விரோத நடவடிக்கை தொடர்பில் பல தகவல்களை குடிவரவு குடியகல்வு திணைக்களம் வெளிப்படுத்திக்கொண்டுள்ளது.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் வீஸா மற்றும் உளவுப் பிரிவுக்கு பொறுப்பான கட்டுப்பாட்டாளர் டப்ளியூ.எம்.எம்.பி. வீரசேகரவின் கீழ் முன்னெடுக்கப்ப்ட்ட விஷேட நடவடிக்கை ஊடாகவே இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்ப்ட்டுள்ளன.

அதன்படி இந்த விபசார நடவடிக்கைகளின் பின்னணியில் இருந்து செயற்படும் பிரதான சந்தேக நபரான ரஷ்ய பிரஜை ஒருவரைக் கைது செய்ய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, சொகுசு வீடொன்றில் தங்கியிருந்தவாறு இணையம் ஊடாக வாடிக்கையாளர்களை பிடித்து இந்த சட்ட விரோத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.

ஒரு வாடிக்கையாளரிடம் இரு மணி நேரத்துக்கு 75 ஆயிரம் ரூபா வரை அறவிடுவதும் காலத்துக்கு காலம் சுற்றுலா வீசாக்கள் ஊடாக ஒவ்வொரு குழுவாக வந்து இங்கு விபசார நடவடிக்கையில் ஈடுபடுவதும் மேலதிக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக குடிவரவு குடியகல்வு தினைக்களத்தின் மேலதிக கட்டுப்படடாளரும் ஊடகப் பேச்சாளருமான லக்ஷான் டி. சொய்ஸா தெரிவித்தார்.

குடிவரவு குடியகல்வு திணைக்கள உளவுத் துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் இணையம் ஊடாக ரஷ்ய யுவதிகளை பதிவு செய்து கொழும்பின் பிரபல ஹோட்டல் ஒன்றின் அறைக்கு தருவித்து முன்னெடுக்கப்பட்ட நாடகம் ஊடாக இவர்களைக் கைது செய்ததாகவும் 5 ரஷ்ய யுவதிகள் இவ்வாறு கைது செய்யப்பட்டு மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த ரஷ்ய விபசாரிகள் ஒவ்வொருவரும் இணையம் ஊடாக நாளொன்றுக்கு 3 வாடிக்கையாளர்களை தேடிக்கொள்வதும் சம்பாதிக்கும் பணம் ரஷ்யாவுக்கும் அனுப்பட்டுள்ளமையும் மேலதிக விசாரணையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந் நிலையிலேயே இந்த சட்ட விரோத விபசார நடவடிக்கை தொடர்பில் பிரதான சந்தேக நபரைக் கைதுசெய்ய நடவடிக்கை முன்னெடுக்கப்ப்ட்டுள்ளது.