(எம்.சி.நஜிமுதீன்)

2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆண்டு வரையான காலப்பகுதியில் பாதிப்புக்குள்ளான ஊடகவியலாளர்களின் முறைப்பாடுகளையும் கோரிக்கைகளையும் எதிர்வரும் முதலாம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு அது தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழு வேண்டியுள்ளது. 

2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட, தாக்குதல்களுக்ககுட்ட மற்றும் பல்வேறு விதமான வழிகளில் அநீதி இழைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு நியாயத்தை நிலைநாட்டுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அதற்கிணங்க குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் ஏற்கனவே குழுவொன்றையும் நியமித்துள்ளது.

மேலும் அக்குழுவின் பரிந்துரைகளை விரிவாக்குவதற்கும் மேலதிக ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வதற்கும் அமைச்சரவை உபகுழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. எனவே குறித்த விடயம் சம்பந்தமாக தமது ஆலோசனைகளை இதுவரையில் முன்வைக்கத் தவறியவர்கள் மற்றும் அமைப்புகள் தமது ஆலோசனைகளை முன்வைப்பதற்கு காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே குறித்த காலப்பகுதயில் அநீதி இளைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக சேவையாளர்கள் தொடர்பிலான முறைப்பாடுகளையும் ஆலோசனைகளையும் குறித்த அமைச்சரவை உபகுழு கோரியுள்ளது.

எனவே பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பிலான கோரிக்கைகளையும் ஆலோசனைகளையும் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் (அமைச்சரவை உப குழுவின் செயலாளர்), அரசாங்க தகவல் திணைக்களம், இல. 163, கிருலப்பன மாவத்தை, கொழும்பு 05 என்ற முகவரிக்கு அல்லது 011 2514753 என்ற பெக்ஸ் இலக்கத்திற்கு அல்லது ranga@dgi.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அமைச்சரவை உபகுழுவின் செயலாளர் வேண்டியுள்ளார்.