இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என சினிமாவில் பன்முகம் காட்டிய பிரபுதேவா தற்போது பாடலாசிரியராகவும் மாறியுள்ளார். 

சிம்புவும், தனுஷும் தற்போது அவரவர் படங்களில் ஏதாவது பாடலை எழுதி வருகின்றனர். அந்த பாடல்களும் பெரிய அளவில் வெற்றி பெறுகின்றன. இவர்கள் வரிசையில் தற்போது நடிகர் பிரபுதேவாவும் பாடலாசிரியராக மாறியுள்ளார். 

‘தேவி’ படத்திற்கு பிரபுதேவா நடித்து வரும் ‘எங் மங் சங்’ படத்திற்காகத்தான் பிரபுதேவா ஒரு பாடலை எழுதியிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். தங்கர் பச்சான், சித்ரா லட்சுமணன், கே.ராஜன், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். எம்.எஸ்.அர்ஜுன் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். 

அம்ரீஷ் இசையமைப்பில் ‘அய்யனாரா வந்துட்டாங்க இங்க பாரு’ என்று பிரபுதேவா எழுதிய பாடல் சங்கர் மகாதேவன் குரலில் பதிவு செய்யப்பட்டது. இப்பாடலை கும்பகோணத்தில் 150 நடனக் கலைஞர்களுடன் பிரபுதேவா பங்கேற்க பிரம்மாண்டமாக படமாக்கி வருகிறார்கள். இந்த பாடலுக்கு ஸ்ரீதர் நடனம் அமைத்துள்ளார். 

இப்படத்தை வாசன் விஷுவல் வென்சர்ஸ் நிறுவனம் சார்பில் கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இவர்கள் தயாரிப்பில் ‘ஒரு பக்க கதை’, ‘ஓடி ஓடி உழைக்கணும்’ ஆகிய படங்களும் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.