(ஆர்.யசி )

ஊழல் மோசடிக்காரர்களை தண்டிக்க வேண்டிய  கட்டத்தில் ஜனாதிபதி உள்ளார். குற்றவாளிகளை தண்டிப்பதாக கூறுகின்றாரே தவிர குற்றகாளிகளை தண்டிக்க எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகப்பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்தார். ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கு மேலாக  செயற்படும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு முதலில் ஜனாதிபதி சிவப்பு எச்சரிக்கை  விட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். 

பதுளையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

நாட்டில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் தொடர்பில் குற்றவாளிகளை தண்டிப்பதில் ஜனாதிபதி மிகவும் அமைதியாக செயற்பட்டு வருகின்றார். குற்றவாளிகளை தண்டிப்பதாக கூறுகின்றாரே தவிர குற்றகாளிகளை தண்டிக்க எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை. மத்திய வங்கி ஊழல் விடயத்திலும், ஹம்பாந்தோட்டை துறைமுக விவகாரங்களிலும்  ஜனாதிபதி சிவப்பு எச்சரிக்கை விடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது. இப்போது அவர் தனது அதிகாரங்களை கையாண்டு நாட்டில் நடக்கும் ஊழல் மோசடிகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 

அதேபோல் சிவப்பு எச்சரிக்கை விடுக்க வேண்டியது வேறு யாருக்கும் அல்ல. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கே தற்போது ஜனாதிபதி சிவப்பு எச்சரிக்கை விடுக்க வேண்டும். அரசாங்கம் கொள்ளையடித்தாலும் பரவாயில்லை. ஆனால் மக்களுக்கான வேலைத்திட்டங்களை சரியாக மேற்கொள்ள  வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. 

ஆனால் வேலைத்திட்டங்களை முன்னெடுக்காது மக்களின்  சொத்துக்களை சூறையாடி வருவதே இன்று நாட்டில் மிகப்பெரிய பிரச்சினையாக அமைந்துள்ளது. இன்று ஜனாதிபதி ஒரு கட்டளை பிறப்பிக்கும் போது அதற்கு மேலாக பிரதமர் ஒரு கட்டளையை விடுகின்றார். ஜனாதிபதி அதிகாரங்களை தாண்டிய வகையில் பிரதமர் தனது அதிகாரங்களை  பயன்படுத்தி வருகின்றார். ஆகவே இந்த செயற்பாடு நிறைவேற்று ஜனாதிபதி முறைமைக்கு பாரிய அவமானமாக அமைந்துள்ளது. 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் பாரிய டீல் ஒன்று உள்ளது என்பதை நான் ஆரம்பத்தில் இருந்தே தெரிவித்து வருகின்றேன். இப்போதும் அது உறுதியாக வெளிப்பட்டு வருகின்றது. பொது எதிரணியின் மேதின கூட்டம் காலி முகத்திடலில் இடம்பெற வேண்டும் என்பது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தேவையே. அதற்கான பசில் ராஜபக்ஷவை சரியாக பயன்படுத்தி வருகின்றார். அவர்களின் மே தினக் கூட்டத்திற்கு சகல வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்து அதன் மூலம் ரணில் விக்கிரமசிங்க சுயநல அரசியலை மேற்கொண்டு வருகின்றார். 

ஸ்ரீலங்க சுதந்திர கட்சியை இரண்டாகுவதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்தவே இவர்கள் முயற்சித்து வருகின்றனர். இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒற்றுமையே கட்சியின் பலமாகும். அதை பொது எதிரணியினர் விளங்கிக்கொள்ள வேண்டும். அதேபோல் தனித்து பயணித்தாலும் இறுதியில் நாம் இருவரும் ஒரு இலக்கையே அடைய வேண்டும் என்பதை உணர்ந்து பொது எதிரணியினர் செயற்பட வேண்டும். தேசிய அரசாங்கத்தில் நாம் இப்போது அங்கம் வகித்த போதிலும் அதன் மூலம் நாட்டை பலப்படுத்த வேண்டும் என்ற ஒரு நோக்கம் மட்டுமே உள்ளது. அதை தவிர்ந்து தொடர்ந்தும் தேசிய அரசாங்கமாக செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இல்லை. வெகு விரைவில் நாம் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தனித்த ஆட்சியை அமைப்போம் என அவர் தெரிவித்தார்.