மூன்று வருடங்களுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்ட பாரிய விண்கல் ஒன்று பூமிக்கு அருகாமையில் கடந்து செல்லவுள்ளதாக நாஸா தெரிவித்துள்ளது.

2014JO25 என்று பெயரிடப்பட்டுள்ள சுமார் இரண்டாயிரம் அடி நீளம் கொண்ட இந்த விண்கல், எதிர்வரும் பத்தொன்பதாம் திகதி புதன்கிழமையன்று பூமிக்கு பதினெட்டு இலட்சம் கிலோமீற்றர் தொலைவில் கடந்துசெல்லவுள்ளது. இது, பூமியில் இருந்து நிலவுக்கான தூரத்தின் நான்கு மடங்காகும்.

இம்மாதம் 19ஆம் திகதி பின்னிரவில் இந்த விண்கல்லை மக்கள் காணலாம் என்று தெரியவருகிறது.

சிறு சிறு விண்கற்கள் பூமிக்கு அருகாமையில் கடந்து செல்வது வழக்கமானதே என்றபோதும் இதுபோன்ற பாரிய விண்கல் பூமிக்கு மிக அருகாமையில் கடந்து செல்லும் முதல் சந்தர்ப்பம் இது என்றும், இந்த விண்கல்லால் பூமிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் நாஸா குறிப்பிட்டுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக, எதிர்வரும் 2027ஆம் ஆண்டு 1999AN10 என்ற பாரிய விண்கல் பூமியைக் கடக்கும் என்றும், சுமார் 2 ஆயிரத்து 600 அடி நீளமுள்ள இந்த விண்கல், பூமியில் இருந்து நிலவுக்கான தொலைவில் மிக நெருக்கமாகக் கடந்து செல்லும் என்றும் நாஸா தெரிவித்துள்ளது. இந்நிகழ்வு சுமார் 400 வருடங்களுக்குப் பிறகே இடம்பெறவுள்ளது என்றும், இதற்கு அடுத்தபடியாக 500 வருடங்களுக்குப் பின்னரே இதுபோன்ற நிகழ்வு இடம்பெறும் என்றும் நாஸா கூறியுள்ளது.