பேராதனை பல்கலைகழக விடுதியொன்றில் முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத்முதலியின் படிகம் மாணவர்களினால் உடைக்கப்பட்டமைக்கு சபையில் ஆளும் தரப்பினரும் எதிரணியினரும் கடுமையான  எதிர்ப்பினை வெளியிட்டனர்.

பாராளுமன்றத்தில்  ஒழுங்கு பிரச்சினையொன்றை எழுப்பிய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறித்த விடயம் தொடர்பாக சபையின் அவதானத்திற்கு கொண்டு வந்தார்.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க,

உயர் கல்வி மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு மஹபொல புலமை பரிசில் திட்டத்தை கொண்டு வந்தவரே முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத்முதலி யாகும். 

எனினும் தற்போது எமது நாட்டின் மாணவர்களின் ஒழுக்கவியல் மிகவும் மோசமாக காணப்படுகின்றது. எடுத்த எல்லாவற்றிற்கும் போராட்டங்களில் ஈடுப்படுவது மாத்திரமின்றி பழக்க வழக்கங்களில் மிகவும் மோசமாக செயற்படுகின்றனர். 

இதன்பிரகாரம் பேராதனை பல்கலைகழகத்தில் விடுதியொன்றில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத்முதலியின் படிகம் உடைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் மோசமான செயற்பாடாகும்.

மஹபொல புலமை பரிசில் திட்டத்தை பலப்படுத்துவதற்கு அவர் தனது சம்பள கொடுப்பனவுகளை கூட புலமை பரிசில் நிதியத்திற்கு வழங்கியிருந்தார். எனவே இது தொடரபில் அவதானம் செலுத்த வேண்டும். மேலும் ஒழுக்கவியல் சமூகமொன்றை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

அத்துடன் இது தொடர்பில் கூட்டு எதிரணி எம்.பி பந்துல குணவர்தனவும் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டார். மாலபே தொழிற்பயிற்சி கற்கை நிறுவனத்திற்கு லலித் அத்துலத்முதலியின பெயரை சூட்ட வேண்டும் என்றார்.