சிரிய அரசின் விமானப் படைத் தளத்தின் மீது அமெரிக்க கடற்படை ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இதன்போது ஐம்பத்தொன்பது ஏவுகணைகள் சிரிய இராணுவத்தினர் மீது ஏவப்பட்டதாகவும் தெரியவருகிறது.

கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள அமெரிக்க போர்க் கப்பல்களான யு.எஸ்.எஸ்.ரோஸ் மற்றும் யு.எஸ்.எஸ்.போர்ட்டர் என்பனவே மாறி மாறி இந்த ஐம்பத்தொன்பது ஏவுகணைகளையும் சிரிய படையினர் மீது வீசியுள்ளன. இரசாயனத் தாக்குதலை நடத்தியதாகக் கருதப்படும் ஷாரத் விமான தளத்தின் மீதே ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளன.

சிரியாவின் அப்பாவிப் பொதுமக்கள் மீது இரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டிக்கும் முகமாகவே இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. கடந்து ஆறு ஆண்டுகளில், சிரிய அரச படைகள் மீது அமெரிக்கா நடத்தியிருக்கும் முதலாவது நேரடித் தாக்குதல் இது.

தாக்குதல் குறித்துக் குறிப்பிட்ட டொனால்ட் ட்ரம்ப், இரசாயனத் தாக்குதலையடுத்து சிரியா மீதான அமெரிக்காவின் கவனம் அதிகரித்துள்ளது என்றும், சிரியாவின் தேசியப் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே இத்தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் தெரிவித்தார். மேலும், சிரியாவில் இடம்பெற்று வரும் மனிதப் படுகொலைகளை உலக நாடுகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு தடுக்க வேண்டும் என்றும் பயங்கரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் அதை ஒடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இத்தாக்குதல்களால் தமது இராணுவ விமானங்களும் துணைக் கருவிகளும் கடும் சேதங்களுக்கு உள்ளாகியிருப்பதாக சிரியா தரப்பில் கூறப்பட்டுள்ளது.