(எம்.எப்.எம்.பஸீர்)

கொட்டாஞ்சேனையில் கடந்த 2009ம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்ட வடிவேல் பக்கிளிசாமி லோகநாதன், இரத்னசாமி பரமானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டு கொலைச் செய்யப்பட்டிருப்பதாக சந்தேகிக்கபப்டும் நிலையில், அது தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வெலிசறை கடற்படை முகாம் வைத்தியசாலையின் பிரதான நிறைவேற்று அதிகாரி லெப்டினன் கொமாண்டர் தம்மிக அனில் மாபாவை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தர்விட்டது. 

இது தொடர்பிலான வழக்கு கொழும்பு மேலதிக பதில் நீதிவான் பிரசாத் சில்வா முன்னிலையில் விசாரணைக்கு வந்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்ப்ட்டது.

இதன் போது மன்றுக்கு மேலதிக விசாரணை அறிக்கை ஒன்றினை சமர்பித்த விசாரணை அதிகாரிகளான  குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர்களான நிசாந்த சில்வா மற்றும் இலங்க சிங்க ஆகியோர், கடத்தப்பட்ட ஒருவரின் கையடக்கத் தொலைபேசி கிடந்ததாக கூறப்படும் கொழும்பு முதல் அளுத்கம நோக்கி பயணிக்கும் பஸ் வண்டியின் சாரதி மற்றும் நடத்துனரிடம் வாக்கு மூலம் பெற்றுள்ளதாக நீதிவானுக்கு அறிவித்தனர்.