அவுஸ்திரேலியாவின் சர்வதேச அபிவிருத்தி மற்றும் பசுபிக் அமைச்சரான செனட்டர் கொன்செட்டா பியரவன்ரி-வெல்ஸ் வட மாகாணத்திற்கான விஜயம் ஒன்றை நேற்று மேற்கொண்டிருந்தார்.

வட மாகாணத்தில் அவுஸ்திரேலியா மேற்கொண்டு வரும் திட்டங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் வட மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்த அமைச்சர் பியரவன்ரி-வெல்ஸ் தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டின் பின்னர், வடக்கிலும், கிழக்கிலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் புனர்வாழ்விற்கென அவுஸ்திரேலியா 250 மில்லியனுக்கும் அதிகமான அவுஸ்திரேலிய டொலர்களை வழங்கியுள்ளது.

அவுஸ்திரேலியா வழங்கிய நிதியுதவியில், வீடமைப்பு, உள்ளுர் உட்கட்டமைப்பு நிர்மாணம், கண்ணிவெடிகளை அகற்றுதல், கல்வி, பலதரப்பட்ட பொருளாதார, வர்த்தக நடவடிக்கைகள் என்பனவும் அடங்கியுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, இரணைமாதா நகரில் உள்ள நண்டுகள் பதனிடும் நிலையத்திற்கு அமைச்சர் விஜயம் செய்துள்ளார். அவுஸ்திரேலிய நிதியுதவியுடன் கூடிய கூட்டு முயற்சியான இது, நண்டுகளை ஐக்கிய அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது.

இந்தத் திட்டத்தின் மூலம், கிராமத்திலுள்ள இடம் பெயர்ந்த குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்புக்களை இது உருவாக்கியுள்ளது.

“ஏற்றுமதியாளர்களுடன் உற்பத்தியாளர்களை நேரடியாக இணைக்கும் இந்த வர்த்தக நடவடிக்கை மூலம் அதிக எண்ணிக்கையான வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும், உயர் தரம் வாய்ந்த தொழில் வாய்ப்புக்;களும் உருவாகியுள்ளன. முக்கியமாக, இதன்மூலம் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புக்கள் கிடைத்துள்ளது” என்றும் அவர் கூறினார்.

வலிகாமம் வடக்கிலுள்ள இடம் பெயர்ந்த குடும்பங்களை அமைச்சர் சந்தித்துள்ளார். இவர்கள் அவுஸ்திரேலிய மற்றும் உலக வங்கியின் ஒரு நிகழ்ச்சியான வடக்கு, கிழக்கு உள்ளுராட்சி மேம்பாட்டு திட்டத்தின் (NநுடுளுஐP) பயனாளிகளாவர். அவுஸ்திரேலியா இத்திட்டத்திற்கு 25 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. இத்திட்டம் உட்கட்டமைப்பு சேவைகளான, வீதிகள் புனரமைப்பு, குடிநீர் வசதிகள் மற்றும் சந்தைகள் என்பனவற்றை உருவாக்குவதன் மூலம் வடக்கு கிழக்கின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்காற்றியுள்ளது.

அவுஸ்திரேலிய அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிய மேலதிக விபரங்களை பின்வரும் வலையமைப்புகளில் பார்வையிடலாம்.