(எம்.சி.நஜிமுதீன்)

மீனவர் பிரச்சினையைத் தீர்ப்பதில் இந்தியா மிகுந்த கரிசனை காட்டி வருகிறது. எனவே அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அந்நாட்டுப் பிரதிநிதிகள் நாளை இலங்கைக்கு வருகைதருகின்றனர்.

அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை உட்பட அமைச்சு மட்ட பேச்சுவார்த்தைகளும் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது. ஆகவே  மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகாண முடியும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

“சீ நோர்”  நிறுவனம் மீன்பிடித்துறைக்கு நவீன வசதி கொண்ட படகுச் சேவையினை அறிமுகப்படுத்தியுள்ளது. அப்படகினை மீன்பிடித்துறைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று அந்நிறுவனத்தில் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சீ நோர்” நிறுவனம் மீன்பிடித்துறைக்குத் தேவையான நவீன வசதி கொண்டு படகுச் சேவையை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இது மீன்பிடித்துறைக்குத் தேவையாக சகல வசதிகளையும் உள்ளடக்கிய படகுச் சேவையாகும். அத்துடன் இவ்வருடத்திற்குள் இதுபோன்ற ஐந்து படகுகளை மீன்பிடித்துறைக்கு வழங்குதவற்கும் எதிர்பார்த்துள்ளது.  

மீன்பிடித்துறையை அபிவிருத்தி செய்வதற்கான தொழிநுட்ப வசதிகளை உலகில் மீன்பிடியில் முன்னணியில் உள்ள நோர்வே வழங்குவதற்கு முன்வந்துள்ளது. அத்துடன் பல்கலைக்கழக சமூகத்தினரும்  ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.

தற்போது நாம் ஆரம்பித்துள்ள தேசிய கொள்கைத்திட்டமானது இவ்வமைச்சிலிருந்து நான் மாறினாலும் கொள்கைத்திட்டம் தொடர வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளேன். அப்போதுதான் நாட்டில் மீன்பிடித்துறையில் தன்னிறைவு காணமுடியும்.

2020 ஆம் ஆண்டை ஆண்மிக்கும்போது மீன் பிடித்துறையை அபிவிருத்திசெய்து, நாட்டில் அந்நியச் செலாவணியை அதிகளவில் ஈட்டும் முதல் மூன்று துறைகளில் மீன்பிடித்துறையையும் கட்டியெழுப்புவதற்கு திட்டமிட்டுள்ளோம். அது தொடர்பில் தெளிவான வேலைத்திட்டத்தை முன்வைத்து நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.