இலங்கையைச் சேர்ந்த சுமார் 1,500 மீனவர்களுக்கு இலவசமாக கணினி டேப்லட்களை வழங்க மீன்பிடி மற்றும் கடல்வள அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது. 

தமது மீன்பிடி தொடர்பான தகவல்களை முறையாகக் கடைப்பிடிக்க முடியாத காரணத்தால், இலங்கை மீனவர்கள் சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடிக்க ஐரோப்பிய யூனியன் தடை விதித்திருக்கிறது. இந்தத் தடை தொடர்ந்து மீறப்பட்டுவந்ததையடுத்து மீன்களை ஏற்றுமதி செய்யவும் இலங்கைக்கு தடை விதிக்கப்பட்டது.

எனினும், ஐரோப்பிய யூனியனின் 52 விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க மீனவர்களுக்கு வசதி செய்து தருவதன் மூலம், மீண்டும் இலங்கை மீனவர்களின் வருவாயை அதிகரிக்க அரசாங்கம் முன்வந்துள்ளது. இதற்காக, இலங்கை மீனவர்களுக்கு டெப்லட்களை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக, சுமார் 150 கோடி ரூபா செலவில் 1,490 மீனவர்களுக்கு டெப்ளட் வசதி வழங்கப்படவுள்ளது.

சாதாரண டெப்லட்கள் போலல்லாது, ஆழ்கடலிலும் இயங்கக்கூடிய வகையில் தயாரிக்கப்படவுள்ள இந்த டெப்லட்கள் மூலம், படகுகளின் விபரங்கள், பிடிக்கப்படும் மீன்கள், பயணிக்கும் கடல்வழித் தடங்கள் மற்றும் கடல் எல்லைகள் குறித்த அனைத்து விபரங்களையும் பதிவுசெய்ய முடியும்.

இந்த டெப்லட்கள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் மீனவர்களுக்கு வழங்கப்படும் என, மேற்படி அமைச்சின் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.