இந்திய மத்திய அரசுடன் பேச்சுக்களை முன்னெடுத்து மிக விரைவில் தமிழக மீனவர்களின் அத்துமீறலை நிறுத்துவோம். இது வரை எந்தவொரு இந்திய மீனவர்களின் படகும் விடுவிக்கப்படவில்லை என கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 

கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சில் இன்று புதன் கிழமை இடம்பெற்ற வடக்கு மீனவர்களுடனான சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில் , 

இரு தரப்பு அதிகாரிகள் மட்ட பேச்சுக்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெற உள்ளது. இதில் கலந்துக் கொள்வதற்காக இந்திய அதிகாரிகள் நாளை வருகின்றனர். இதன் போது எமது கடல் உரிமைகள் விட்டுக் கொடுக்கப்பட மாட்டாது.

இந்திய மீனவர்களை விடுவிப்பது போன்று அவர்களின் படகுகளை விடுவிக்க முடியாது. படகுகளை கைப்பற்றுவதன் ஊடாகவே அவர்களின் வருகையை குறைக்க முடிந்துள்ளது. 

போரில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்துள்ள வடக்கு மீனவர்களின் பொருளாதாரத்திற்கு பங்பகளிப்பு செய்ய வேண்டிய மனிதாபிமான கடமை இந்தியாவிற்கு உள்ளது. 

அடுத்த மாதம் அளிவில் வடக்கிற்கு விஜயம் செய்து அப்பகுதி மீனவர்களின் பிரச்சினைகளை நேரடியாக பார்வையிடவும் கேட்டறியவும் உள்ளேன். 

 2020 இலக்கை அடைவதற்கு கடற்றொழில் அமைச்சு பரந்தளவிலான திட்டங்களை முன்னெடுத்துள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.