அ.தி.மு.க.வுக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவு தற்காலிகமானதே என்றும், ஆர்.கே.நகர் தேர்தலின் முடிவுகள் வெளியானதும் இரண்டு பிரிவுகளும் மீண்டும் இணையும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

நடைபெறவுள்ள ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. (புரட்சித் தலைவி அம்மா) அணியும், அ.தி.மு.க. (சசிகலா) அணியுமே கடும் போட்டியில் இறங்கியுள்ளன. இத்தேர்தலில் வெற்றிபெற்று தாய்க் கழகத்தின் தலைமையைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று இரண்டு பிரிவினரும் கடும் போட்டியில் இறங்கியுள்ளனர்.

இடைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியொன்றில், ‘இரண்டு அணிகளுமே தேர்தலுக்குப் பின் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம்’ என்று பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

“சசிகலா அணியில் 122 எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலும், அவர்கள் தங்கள் மனசாட்சியைக் கேட்டு நடக்க ஆரம்பித்தால் நிச்சயமாக எமது அணியில் வந்து இணைவார்கள். எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் வளர்த்தெடுத்த கட்சி இது. மக்கள் நலனையே குறிக்கோளாகக் கொண்ட இந்தக் கட்சியை மீண்டும் மக்களின் நலன்பால் திசை திருப்புவதே நாம் செய்ய வேண்டிய தற்போதைய வேலை.”

இவ்வாறு ஓ.பி.எஸ். குறிப்பிட்டார்.

இதைச் சுட்டிக் காட்டி கருத்துத் தெரிவித்த ஆர்.கே. தொகுதி மக்கள், தேர்தலுக்குப் பின் இவர்கள் ஒனிறிணைவார்கள் என்றால், தேர்தலுக்கு முன் ஏன் பிரிந்திருக்க வேண்டும்? இது மக்களை ஏமாற்றும் செயல் என்றும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.