குசல் ஜனித் பெரேராவின் அதிரடியான 77 ஓட்டங்களின் உதவியுடன் 6 விக்கட்டுகளால் வங்கதேசத்தை வெற்றிபெற்ற இலங்கை அணி இரு போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு -20 போட்டி மழை காரணமாக தடைப்பட்டு 42 நிமிடங்கள் தாமதித்து ஆரம்பமாகியது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரில் விளையாடி வருகின்றது.

இரு அணிகளுக்குமிடையிலான ஒருநாள் போட்டித் தொடர் மற்றும் டெஸ்ட் போட்டித் தொடர் ஆகியன சமநிலையில் முடிவடைந்தன.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டி இன்று கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

போட்டி ஆரம்பமாவதற்கு சில நிமிடங்கள் இருக்கையில் மழை குறுக்கிட்டது.  இந்நிலையில் மழையால் தடைப்பட்ட போட்டி 42 நிமிடங்கள் கழித்து தாமதமாக ஆரம்பித்தது.

போட்டி ஆரம்பித்த முதல் ஓவரிலேயே பங்களாதேஷ் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரை இலங்கை அணியின் லசித் மாலிங்க வீசினார். அந்த ஓவரின் 2 ஆவது பந்தை எதிர்த்தாடிய பங்களாதேஷ் அணியின் தமிம் இக்பால் ஆட்டமெதனையும் பெறாது போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

 அதே ஓவரின் 6 ஆவது பந்தில் சௌமிய சர்க்கர் கொடுத்த பிடியை லசித் மாலிங்க தவறவிட்டார். 

இந்நைிலையில் பங்களாதேஷ் அணி 5 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 50 ஓட்டங்களைப்பெற்றது.

இதையடுத்து பங்களாதேஷ் அணியின் விக்கெட்டுக்கள் சீரான ஓட்ட இடைவெளியில் வீழ்த்தப்பட, இறுதியில் பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

பங்களாதேஷ் அணி சார்பாக மொஸ்டாக் ஹுசைன் ஆட்டமிழக்காது 34 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக லசித் மலிங்க 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்நிலையில் 156 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி குசல் ஜனித் பெரேராவின் அதிரடியான ஆட்டத்தின் உதவியுடன் 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இலங்கை அணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய குசல் ஜனித் பெரேரா 77 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக மொட்டர்ஷா 2  விக்கெட்டை கைப்பற்றினார்.

6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான முக்கியமானதும் இறுதியுமான 2 ஆவவது இருபதுக்கு -20 போட்டி எதிர்வரும் 6 ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.