இரசிகர்களை மகிழ்வித்த இந்நாட்டுக் கலைஞர்களின் வாழ்க்கையின் இறுதிக்காலம் சோகமானதாக இருக்க இடமளிக்காது, அரசாங்கத்தின் பொறுப்புக்களையும், கடமைகளையும் உரிய முறையில் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி தெரிவித்தார். 

இலங்கை பாடகர்களின் காப்புறுதி நிதியத்திற்கு 250 இலட்சம் ரூபா நிதியை வழங்குவதற்காக நேற்று பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தமது ஆற்றல்கள் மற்றும் திறமைகளின் ஊடாக நாட்டை ரசனைமிக்கதாக்கிய கலைஞர்களுக்கு உரிய பெறுமதியையும் பாராட்டையும் வழங்கி அவர்களது நலன்களுக்காக மேற்கொள்ளவேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் பின்னிற்க மாட்டாதென்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். 

கலை, இலக்கியம் மற்றும் சங்கீதத்தில் அரசியல் இல்லையெனத் தெரிவித்த ஜனாதிபதி, கலைஞர்கள் எந்த அரசியல் மேடையில் இருந்தாலும் தான் அவர்களை கலைஞர்களாகவே கருதுவதாக தெரிவித்தார். 

கடந்த இரண்டு ஆண்டுகளாக கலைஞர்களின் உடல்நலகுறைவு, மரணம் உள்ளிட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவற்றிற்கான தனது பங்களிப்பை உரியவாறு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதை நினைவூட்டிய ஜனாதிபதி இனிவரும் காலங்களிலும் அந்த பொறுப்பை உரியவாறு நிறைவேற்றுவதாக தெரிவித்தார். 

நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துக்காக கலைஞர்களால் பெரும் பங்கினை ஆற்றமுடியும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, கலைஞர்கள் அந்த கடமைகளை ஆற்ற முன்வருவார்கள் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

இலங்கை பாடகர்கள் சங்கத்தின் தலைவர் கீர்த்தி பெஸ்குவல், செயலாளர் ஜானக்க விக்ரமசிங்க உள்ளிட்ட சங்க உறுப்பினர்களிடம் ஜனாதிபதியினால் நிதியத்துக்கான காசோலை ஒப்படைக்கப்பட்டது. 

முதல் முறையாக பாடகர்களுக்காக இவ்வாறான திட்டம் அமுல்படுவதாக அங்கு கருத்து தெரிவித்த சங்க செயலாளர் ஜானக்க விக்ரமசிங்க, சுய விருப்பத்தின் பேரில் முன்வந்த சந்தர்ப்பங்கள் தவிர இந்த நாட்டின் கலைஞர்களை தமது அரசியலுக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தற்போதைய ஜனாதிபதி ஈடுபடுத்தவில்லை எனவும் அரசியல் பாகுபாடின்றி அனைத்து கலைஞர்களுக்காகவும் ஜனாதிபதி மேற்கொண்ட இந்த அன்பளிப்புக்காக நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.