இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு-20 போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஆர்.பிரேமதாஸ மைதானத்தை பொறுத்தவரையில் இலங்கை அணி 11 இருபதுக்கு-20 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், அதில் 10 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

இந்நிலையில் இன்றைய போட்டியில் சவாலை முறியடித்து போட்டியில் வெற்றிபெறுமா? அல்லது துரதிஷ்டம் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் சமனிலையில் முடிவடைந்ததை அடுத்து, இருபதுக்கு-20 போட்டிகளின் மீதான கவனம் ரசிகர்களிடையே மேலும் அதிகரித்துள்ளது.

இலங்கை அணியை பொறுத்தவரையில் இருபதுக்கு-20 போட்டிகளில் சிறப்பாக ஆடக்கூடிய மாலிங்க, திசர பெரேரா மற்றும்  குசல் பெரேரா ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளமை இலங்கை அணிக்கு வலுசேர்த்துள்ளது.

பங்களாதேஷ் அணிசார்பில் ஒருநாள் போட்டியில் விளையாடிய அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேபோன்று இலங்கை அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தடுமாறினாலும், இருபதுக்கு-20 போட்டிகளில் சிறப்பாக விளையாடிவருகின்றது.

இறுதியாக விளையாடிய 5 இருபதுக்கு-20 போட்டிகளில் இலங்கை அணி 4 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதுடன், பங்களாதேஷ் அணி இறுதி 5 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.