பங்களாதேஷ் அணிக்கெதிரான இரு இருபதுக்கு - 20 போட்டிகளையும் வெற்றிகொள்வோம் என்ற நம்பிக்கை உள்ளதென இலங்கை அணித் தலைவர் உப்புல் தரங்க தெரிவித்தார்.

கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் பங்களாதேஷ் அணிக்கெதிராக நாளை இடம்பெறவுள்ள முதலாவது இருபதுக்கு - 20 போட்டியை முன்னிட்டு இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இலங்கை அணித் தலைவர் உப்புல் தரங்க  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

பங்களாதேஷ் அணிக்கெதிரான இரு இருபதுக்கு - 20 போட்டிகளையும் வெற்றிகொள்வோம் என்ற நம்பிக்கை எமக்கு தாராளமாகவுள்ளது.

லசித் மலிங்க மற்றும் சாமர கப்புகெதர ஆகியோர் இடம்பிடித்திருப்பது அணிக்கு மேலும் பலமாக அமைந்துள்ளது.

இதைவிட நாம் அண்மையில் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக இடம்பெற்ற இருபதுக்கு - 20 தொடரை சிறந்த முறையில் விளையாடி கைப்பற்றியிருந்தோம். அதே நம்பிக்கை எம்மிடம் உள்ளது.  அத்தொடரில் சிறப்பாக செயற்பட்ட அசேல குணவர்தன இம் முறையும் தனது திறமையை வெளிப்படுத்துவாரென நம்புகின்றேன்.

குஷல் ஜனித் பெரோரா உடற்தகுதி பரிசோதனையை இன்று மேற்கொண்டிருந்தார். அதில் அவர் சிறந்த நிலையில் உள்ளமையால் 12 பேர் கொண்ட அணியில் அவர் இடம்பிடித்துள்ளார்.  இருப்பினும் அவர் களத்தில் விளையாடுவாரா இல்லையா என்பது இன்னும் முடிவெடுக்கப்படவில்லை.

பங்களாதேஷ் தொடருக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் கடுமையாக செயற்பட்டமையால் எதிர்வரும் சம்பியன் கிண்ணத் தொடரை முன்னிட்டு குசல் மெண்டிஸுக்கு தற்போது ஓய்வளிக்கப்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.

இரு அணிகளுக்குமிடையிலான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்கள் சமநிலையில் முடிவடைந்தநிலையில் நாளை முதலாவது இருபதுக்கு - 20 ஆர் .பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.